அரசுப் பணியில் மெத்தனம் அலுவலர்கள் மீது ஒன்றிய குழு உறுப்பினர்கள் சரமாரி புகார்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியக் குழு கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய குழுத் தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன் தலைமைவகித்தார்.ஒன்றிய குழு துணைத் தலைவர் திலகவதி ரமேஷ் முன்னிலை வகித்தார். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, வெங்கடேசன் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில், உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர். வரவு, செலவு தொடர்பான அஜண்டா அறிக்கை வாசிக்கப்பட்டது. அப்போது குறிக்கிட்ட திமுக உறுப்பினர் பிரமிளா வெங்கடேசன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் முறையாக ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு மரியாதை வழங்குவதில்லை என்றும், வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்வதில் மெத்தனமாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதே கருத்தை அனைவரும் தெரிவித்தனர். இதனால் ஒன்றியக் குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உறுப்பினர்களுக்கு உறிய முறையில் மரியாதை வழங்கவும், வளர்ச்சி திட்டப் பணிகள் தாமதமின்றி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதியளித்தனர். இதனையடுத்து நடைபெற்ற பொது விவாதத்தில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 493 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்க ரூ..45 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 16 ஒன்றிய குழு உறுப்பினர்கள் பெயர்களை கல்வெட்டில் பதிக்கப்பட ரூ..2 லட்சம் ஒன்றிய பொது நிதியிலிருந்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஏ.பி. சந்திரன் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் ஐந்து பேர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

The post அரசுப் பணியில் மெத்தனம் அலுவலர்கள் மீது ஒன்றிய குழு உறுப்பினர்கள் சரமாரி புகார் appeared first on Dinakaran.

Related Stories: