கோனியம்மன் கோயிலில் திருட்டு விசாரணைக்கு உதவிய 2 பேருக்கு பாராட்டு

 

கோவை, ஜூன் 11: கோவை டவுன்ஹாலில் உள்ள கோனியம்மன் கோயிலில் கடந்த மாதம் உண்டியல் உடைக்கப்பட்டது. உண்டியலில் இருந்த பணம், காணிக்கை பொருட்களை மர்ம நபர் திருடி சென்றார். இந்த வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் விசாரணை செய்ததில் சில இடங்களில் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு கிடைத்தது. ஆனால், அதில் முகமோ அல்லது நபரின் வேறு அடையாளங்களோ சரியாக கிடைக்கவில்லை. அந்த நபர் கோயிலிலிருந்து சுவர் ஏறி குதித்து வெளியே செல்வது தெரிந்தது. கோவிலுக்கு உள்ளே எப்படி சென்றார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

மர்ம நபர் கோவிலில் சுவர் ஏறி வெளியே வந்து அங்கு காய்ந்து கொண்டிருந்த ஒரு துண்டை தோளில் போட்டுக்கொண்டு பின்பு உக்கடம் பஸ் ஸ்டாண்ட் சென்றார். அங்கு பஸ் ஏறி சிங்காநல்லூர் சென்று அங்கிருந்து மதுரை செல்லும் பஸ்சில் ஏறியுள்ளார். போலீசார் அந்த பஸ் கண்டக்டரிடம் குறிப்பிட்ட நிற துண்டு அணிந்த நபர் குறித்து விசாரித்தனர். கோவையிலிருந்து மதுரை வரை சென்று அங்குள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். அந்த நபர் கடைசியில் மதுரை பஸ் ஸ்டாண்டில் இறங்குவதை கேமரா மூலமாக உறுதி செய்தனர்.

மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் தனிப்படையினர் விசாரித்த போது அந்த நபர் தேனியை சேர்ந்த சேகர் என்பதும், மதுரையில் பல்வேறு திருட்டு வழக்குகளில் இவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் போலீசார் துப்பு துலக்கவும், துண்டு அணிந்த திருடர் எந்த வழியாக போனார், அவர் தொடர்பான விவரங்களை சேகரிக்க உதவிய கோவையை சேர்ந்த முகமது அனீஸ் மற்றும் அப்துல் சுபான் ஆகியோருக்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

The post கோனியம்மன் கோயிலில் திருட்டு விசாரணைக்கு உதவிய 2 பேருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: