கேரளாவில் இருந்து மெக்காவுக்கு 370 நாள், 4 நாடுகள், 8600 கிமீ நடந்தே ஹஜ் சென்ற யூடியூபர்

மலப்புரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்கா புனித தலத்துக்கு நடந்தே சென்றுள்ளார் ஒரு யூடியூபர். 4 நாடுகள் வழியாக 8,600 கிலோ மீட்டர் தூரத்தை 370 நாட்களில் அவர் கடந்துள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிஹாப் சோட்டூர். இவர் கடந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி தனது ஹஜ் பயணத்தை நடைபயணமாக தொடங்கினார். கேரளாவில் இருந்து 8640 கிலோ மீட்டர் பயணத்தை நடந்தே கடந்துள்ள ஷிஹாய் இதற்காக பாகிஸ்தான், ஈரான், ஈராக், குவைத் வழியாகப் பயணித்து சவுதி அரேபியாவை அடைந்துள்ளார். மொத்தம் 370 நாட்கள் அவர் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 2022 ஜூன் 2ஆம் தேதி பயணத்தைத் தொடங்கிய ஷிஹாப் முதலில் அடைந்தது இந்தியா – பாகிஸ்தானுக்கான வாகா எல்லை. ஆனால் அங்கு விசா பிரச்னையால் அவரால் தொடர்ந்து பயணிக்க இயலவில்லை.

4 மாதங்கள் அங்கேயே ஒரு பள்ளியில் தங்கியிருந்த அவர் ட்ரான்ஸிட் விசா பெற்று பாகிஸ்தானுக்குள் சென்றார். இறுதியாக சவுதி அரேபியாவுக்குள் நுழைந்தவுடன் ஷிஹாப் முதலில் மெதினாவுக்குச் சென்றார். மெதினாவில் இருந்து மெக்காவுக்கும் நடந்தே சென்றார். ஷிஹாபின் தாயார் ஜைனப் விமானம் மூலம் கேரளாவில் இருந்து மெக்காவுக்கு பயணிக்கவுள்ளார். அவரும் வந்தவுடன் மெக்கா புனித தலத்தில் ஷாஹிப் தனது கடமையை நிறைவேற்றுவார். நடந்தே மெக்கா, மெதினா சென்ற ஷிஹாப் சோட்டூர் ஏற்கெனவே யூடியூப் வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் கேரளாவில் பிரபலமானவர் தான். இப்போது அந்த யூடியூபர் தனது ஹஜ் பயணம் மூலம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளார்.

The post கேரளாவில் இருந்து மெக்காவுக்கு 370 நாள், 4 நாடுகள், 8600 கிமீ நடந்தே ஹஜ் சென்ற யூடியூபர் appeared first on Dinakaran.

Related Stories: