அனைத்து துறைகளிலும் ஊழல் ஜெகன்மோகன் அரசு மீது பாஜ பாய்ச்சல்

திருமலை: சுரங்கம், நிலம், கல்வி என அனைத்து துறைகளிலும் ஆந்திர மாநில அரசு ஊழல் செய்வதாக காளஹஸ்தியில் நடந்த பாஜ மாநாட்டில் தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசினார். ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் பாஜ மகாஜன் சம்பர்க் அபியான் மாநாடு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா பங்கேற்று பேசியதாவது: ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு சுரங்கம், நிலம், கல்வி, மதுபானம் ஆகிய துறைகளில் ஊழல் செய்து மக்கள் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். பிரதமர் மோடி ஆந்திராவின் வளர்ச்சிக்காக பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறார். அவர் வெளிப்படையான ஆட்சி நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும் என நினைக்கிறார். ஆனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக உள்ளது.

எனவே மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே நிலைப்பாடு கொண்ட அரசு இருந்தால் மட்டுமே மாநிலம் வளர்ச்சி பெறும். இவ்வாறு அவர் பேசினார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். ஆனால் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், சமீபத்தில் சந்திரபாபு நாயுடு டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார். இதன்மூலம், தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா, பாஜ கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜெகன்மோகன் அரசுக்கு எதிராக ஜே.பி.நட்டா குற்றச்சாட்டுகளை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post அனைத்து துறைகளிலும் ஊழல் ஜெகன்மோகன் அரசு மீது பாஜ பாய்ச்சல் appeared first on Dinakaran.

Related Stories: