ஆணையரக எல்லையில் 478 பள்ளிகள் நாளை திறப்பதால் பாதுகாப்பு பணியில் பெண் போலீசார் போக்குவரத்துக்கு சிறப்பு ஏற்பாடு: ஆவடி கமிஷனர் அருண் தகவல்

சென்னை: பள்ளிகள் நாளை திறக்க உள்ள நிலையில் பள்ளிகள் முன்பு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பெண் போலீசார் சாதாரண உடையில் கண்காணிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆவடி கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு பள்ளிகள் நாளை மற்றும் வரும் 14ம் தேதி திறக்கப்பட உள்ளது. ஆவடி காவல் எல்லைக்குட்பட்ட முக்கிய பிரதான சாலைகள் மற்றும் இதர உட்புற சாலைகளில் 478 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கிவருகின்றன. பள்ளிகளில் இயங்கிவரும் வாகனங்களின் தற்போதைய இயக்கநிலை குறித்தும் வாகனங்களின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள், வேகக்கட்டுபாடு, அவசர வழி கதவுகள் ஆகியவைகள் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு பள்ளி நிறுவனங்களுக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இப்பள்ளிகளின் அருகே காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் போக்குவரத்து காவலர்கள் பணியமர்த்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதர உள் சாலைகளில் இயங்கிவரும் பள்ளிகளுக்கு அப்பள்ளிகளில் செயல்பட்டுவரும் ஆர்.எஸ்.பி (ரோடு சேப்டி பேட்ரோல்) மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கத்தினர் மூலம் பள்ளி நேரங்களில் மாணவ மாணவிகள் பாதுகாப்பாக சென்றுவர போக்குவரத்தினை சீர்செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்லும் தனியார் ஆட்டோக்கள், வேன்களின் ஓட்டுநர்களுக்கு மாணவர்களை பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச்சென்று வரவேண்டும் என்றும் சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்த்தும், சாலைகளில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் மட்டும் சாலையை கடந்தும் பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று வரவும் மற்றும் சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் சாலை விதிகளை பின்பற்றி சாலையின் ஓரமாக பாதுகாப்பாக செல்லும்படியும் ஆவடி காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் தவிர சட்டம் ஒழுங்கு போலீசார், பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போலீசார் சாதாரண உடைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.

குறிப்பாக பள்ளி அருகில் உள்ள பஸ் நிலையம், பஸ் நிறுத்தம், பள்ளிகள் முன்பு போலீசார் சாதாரண உடைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பள்ளிகள் முன்பு புகார் எண்கள் வைக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் என்ன புகார் என்றாலும் உடனடியாக போலீசுக்கு தெரிவிக்கலாம். மாணவ, மாணவிகள் அளிக்கும் தகவல்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.

The post ஆணையரக எல்லையில் 478 பள்ளிகள் நாளை திறப்பதால் பாதுகாப்பு பணியில் பெண் போலீசார் போக்குவரத்துக்கு சிறப்பு ஏற்பாடு: ஆவடி கமிஷனர் அருண் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: