டெல்லி: இளநிலை மருத்துவப்படிப்புக்கான ‘நீட்’ தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை வட்டாரங்கள் தெரிவித்தன. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.
2023-24ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே 7ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 20.87 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வுக்கான ‘ஆன்சர் கீ’ கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு மாணவர்களிடையே இருந்து வருகிறது. சமீபத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பில், ஜூன் இரண்டாவது வாரத்தில் இளநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தது. அதனால் விரைவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ெதரிகிறது.
இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வட்டாரங்கள் கூறுகையில், ‘இளநிலை மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் (நீட்) முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் (திங்கள்) வெளியாக வாய்ப்புள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in-ஐப் பார்த்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவத்தின் காரணமாக, அம்மாநிலத்தில் மட்டும் தனியாக நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதனால் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
The post இளநிலை மருத்துவப்படிப்புக்கான ‘நீட்’ தேர்வு முடிவு ஓரிரு நாளில் ரிலீஸ்?.. தேசிய தேர்வு முகமை தகவல் appeared first on Dinakaran.