‘‘இலை கட்சியிடம் இருந்து கடலோர மாவட்டத்தை கைப்பற்ற தாமரை கட்சி தீவிரம் காட்டுதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கடலோர மாவட்டத்தில் நடந்த தாமரை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய செயற்குழு உறுப்பினர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தாமரை கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடலோர மாவட்ட தொகுதியை கூட்டணி கட்சியிடம் இருந்து பிடுங்கி கொள்வோம் என நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த இலை கட்சி நிர்வாகிகள், நடந்து முடிந்த தேர்தலில் தாமரை கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதற்குள் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேச வந்துவிட்டார்கள்.
இலை கட்சியில் 2 அணியாக இருந்து வருவதால் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவதே தற்போது கடினமாக உள்ளது. இதில் தாமரை கட்சி வெற்றி பெற்றுவிடும் என சொல்லி தொகுதிகளை கேட்பது எந்த விதத்தில் நியாயம். கூட்டணி கட்சி இடையே பிளவை ஏற்படுத்தும் விதமாக தேசிய செயற்குழு உறுப்பினர் பேசியுள்ளார். இப்படி பேசுவதற்கு காரணம் மாநில தலைவராக தான் இருக்க கூடும் என இலை கட்சி நிர்வாகிகள் அவர் மீது உச்சக்கட்ட கோபத்தில் உள்ளனர். இந்த விவகாரம் சேலம் விஐபி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பொன்னானவரின் கலக்கத்துக்கு காரணம் என்னவாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில், தேர்தல் என்றாலே வழக்கமா தாமரை கட்சியில் பொன்னானவருக்கு தான் சீட் என்பதால் தேர்தல் வேலையை ஜரூராக தொடங்கி விடுவார்களாம். ஆனால் இந்த முறை பொன்னானவரின் ஆதரவாளர்கள் கடும் அப்செட் மூடில் இருக்கிறார்களாம். இதற்கு காரணம் இந்த முறை சீட் பெற கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளதாம். மாநகராட்சி கவுன்சிலர் ஒருவரும், மல்லுக்கட்டில் இறங்க தயாராகி வருகிறாராம். இப்போதே இதை குறிவைத்து பிரமாண்ட போஸ்டர்கள் அடித்து கலக்கி வருகிறாராம். தேச தலைவர் பெயரை கொண்டவரின் ஆதரவும் இவருக்கு இருக்கு என்று சொல்கிறார்கள். அதை வைத்து சீட் பெறுவார் என்கிறார்களாம்.
போதாக்குறைக்கு, உயர் பதவியில் உள்ள இசையானவரும், சொந்த மாவட்டத்தில் இந்த முறை களமிறங்குவாங்க என்று சிலர் வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பி வருவதும், பொன்னானவரின் ஆதரவாளர்களின் அப்செட்டுக்கு காரணம் என்கிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வீட்டு வேலை வாங்கும் பெண் அதிகாரிக்கு சிக்கல் முளைச்சிருக்காமே..’’ என்று சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல இருக்குற மாநில அரசின் நிதி தொடர்பான துறையின் கோட்ட பெண் அதிகாரி, தனது அலுவலக உதவியாளர்களை அலுவலக பணிக்கே பயன்படுத்துவதில்லையாம். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவரது வீட்டுக்குத்தான் வேலைக்கு வர வேண்டுமாம்.
மளிகை சாமான்கள் வாங்குறது, வீட்டு வேலை செய்றது, கூட்டுறது, பாத்திரம் துலக்குறதுன்னு வீட்டு வேலைக்காரராகத்தான் பணி செய்யணுமாம். ஏற்கனவே அந்த அதிகாரி ‘கை’ நீட்டுன கேஸ்ல சிக்கியதால, கிரிவலம் மாவட்டத்துல இருந்து மாற்றப்பட்டு, வெயிட்டிங்கில் வைத்து இங்கு அனுப்பி வைத்தார்களாம். இங்கும் தனது ஆட்டத்தை தொடர்ந்து வருகிறாராம். அரசு பணியாளரை எப்படி வீட்டுப்பணியாளரை போல வேலை வாங்கலாம்னு, அரசு கடைநிலை ஊழியர் சங்கம் பொங்கி வருதாம். விரைவில் இதற்காக அமைச்சரை சந்திச்சு முறையிடவும் முடிவு செய்துள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அரிசிக்கொம்பன் யானை மறுபடியும் மிரட்டுகிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேனி மலைப்பகுதிகளில் அல்லோலகல்லோலப்பட்ட அரிசிக்கொம்பன் யானையை ஒருவழியாக பிடித்து வனத்துறை, களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் விட்டுவிட்டனர். அன்று முதல் அல்வா மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர மக்கள் படும் பாட்டிற்கு அளவில்லை. தென்படுகிற யானைகளை எல்லாம் அரிசிக்கொம்பன் என சமூக வலைத்தளங்களில் சுற்ற விடுகின்றனர். கேரள வனத்துறை அரிசிக்கொம்பனுக்கு பொருத்தியுள்ள ஜிபிஎஸ் பட்டை மூலம் வனத்துறையும் யானை அங்குள்ளது, இங்குள்ளது என வனத்தின் சில பகுதிகளை காட்டி பதற வைக்கிறது. டிவிட்டர்வாசிகள் வேறு, தங்கள் பங்கிற்கு அரிசி கொம்பனை வைத்து நாளொரு கதை ஓட்டுகின்றனர்.
ஆளாளுக்கு கிளப்பி விடும் பீதியில் அல்வா மாவட்டத்து வனத்துறையும், மலையோர மக்களும் கண்ணை கட்டி காட்டில் விட்டாற்போல் திணறுகின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிக்கொம்பன் கழுத்திலுள்ள ஜிபிஎஸ் கருவியிலிருந்து நேற்று மதியம் முதல் சிக்னலும் கிடைக்காததால் வனத்துறையும் கையைப் பிசைந்து வருகிறதாம்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுவை டிஜிபி மாற்றத்தால் மகிழ்ச்சி அடைகிறவர்கள் யார்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘டெல்லி, புதுச்சேரி, அந்தமான்- நிக்கோபர் தீவுகள் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் பணியாற்றி வரும் 32 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 34 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 66 அதிகாரிகளுக்கு இடமாற்ற உத்தரவை ஒன்றிய உள்துறை சார்பு செயலர் ராகேஷ்குமார் சிங் பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி டிஜிபியாக பணியாற்றி மனோஜ் குமார் லால் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர், இன்னும் ஒரு மாதத்தில் பணி ஓய்வு பெறுகிறார். இவருக்கு கிராஜுவிட்டி எனப்படும் பணிக்கொடை மற்றும் இதர படிகள் உள்பட புதுவை அரசு ஒரு கோடிக்கு மேல் பணம் கொடுக்க நேரிடும். மேலும் இங்கு வந்து ஓராண்டு கூட முடியவில்லை. எதற்கு இவருக்கு ஒரு கோடி வழங்க வேண்டும் என்பதால் இவரை மாற்றம் செய்வதற்கு புதுவை அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிறிய மாநிலமான புதுவையில் ஒரு கோடி இருந்தால் பெரிய திட்டத்தை தீட்டுகிறோம். இதனையும் அவருக்கு ஏன் கொடுக்க வேண்டும் என உள்ளூர் அரசியல்வாதிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.
The post இலையிடம் இருந்து தொகுதியை பிடுங்க தாமரை போட்டிருக்கும் திட்டம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.