தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு

சென்னை: தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு பேசியதாவது: சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் அனைத்து மழைநீர் வடிகால்களிலும் தூர்வாரும் பணி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அனைத்து சுரங்கப்பாதைகளும் ஆய்வு செய்யப்பட்டு, வடிகால்கள் தூர்வாரப்பட வேண்டும். சுரங்கப்பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள உணர்விகள் சரியாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

தேங்கியிருக்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்றும் வகையில், தானியங்கி மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். தரைப்பாலங்களில் வெள்ள நீர் செல்லும் நேர்வுகளில், மாற்றுப்பாதைக்கான ஏற்பாடுகளை செய்வதோடு, தரைப்பாலங்கள் மற்றும் ஆபத்தான நீர்நிலைகளில் பொதுமக்கள் செல்பி எடுப்பதை கண்காணித்து காவல் துறையினர் தவிர்க்க வேண்டும். சென்னை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மழைநீரை உடனடியாக அகற்ற தானியங்கி மோட்டார் பம்புகள் அமைக்க வேண்டும்.

பலவீனமாக உள்ள கட்டிடங்களை கண்டறிந்து, பொதுமக்கள் பயன்பாடு தவிர்க்கப்பட்டு, பாதுகாப்பாக இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்மேற்கு பருவமழையின் காரணமாக அதிக மழை பொழிவு ஏற்படக்கூடிய மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அங்குள்ள அணைகளின் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், ராணுவம், விமானப்படை, கப்பல் படை, கடலோர காவல்படை, இந்திய வானிலை ஆய்வு மையம், ஒன்றிய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட ஒன்றிய அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: