உளுந்தூர்பேட்டை அருகே மினி டெம்போ மீது அரசு பேருந்து, லாரி அடுத்தடுத்து மோதி விபத்து

உளுந்தூர்பேட்டை, ஜூன் 10: உளுந்தூர்பேட்டை அருகே நேற்று அதிகாலை மினி டெம்போ மீது கண்டெய்னர் லாரி, அரசு பேருந்து அடுத்தடுத்து மோதிய விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (40), இவரது மனைவி செல்வி (38), மகள்கள் சாதனா (12), ரித்திகா (8) ஆகியோருடன் வீட்டு உபயோக பொருட்களை ஒரு மினி டெம்போவில் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி சென்றார். மினி டெம்போவை விளாத்திகுளம் முருகன் (41) என்பவர் ஓட்டி சென்றார். நேற்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த மேட்டத்தூர் அருகே சென்றபோது திடீரென மழை வந்ததால் ரோட்டின் ஓரமாக மினி டெம்போவை டிரைவர் நிறுத்தி உள்ளார். அப்போது பின்னால் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து மற்றும் பார்சல் லாரி ஆகிய இரண்டும் அடுத்தடுத்து மினி டெம்போ மீது மோதியதால் அந்த வாகனம் கடுமையாக சேதமடைந்தது. மோதிய வேகத்தில் மினி டெம்போ சாலையோரம் கவிழ்ந்தது.

கண்டெய்னர் லாரி அங்குள்ள மரத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் மினி டெம்போவை ஓட்டிவந்த டிரைவர் முருகன் மற்றும் மினி டெம்போவில் சென்ற 4 பேர் என ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர். வலியால் துடித்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தினால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார், வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். அரசு பேருந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த பயணிகள் மாற்று பேருந்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே மினி டெம்போ மீது அரசு பேருந்து, லாரி அடுத்தடுத்து மோதி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: