7 மாத சிசு உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை

திண்டிவனம், ஜூன் 10: திண்டிவனம் அருகே கருக்கலைப்பு செய்து புதைத்த 7 மாத குழந்தையை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடு பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுவனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி (33). இவரது மனைவி சரஸ்வதி (27). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடம் ஆகிறது. இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து 9 மாதங்களே ஆன நிலையில், சரஸ்வதி மீண்டும் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிந்தது. கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்டதால் வயிற்று வலி அதிகமாக இருந்ததால் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு குழந்தை இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. குழந்தையை அகற்றிய மருத்துவர், குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைத்து அடக்கம் செய்தனர். தகவலறிந்த விஏஓ சுதாகர் வெள்ளிமேடு பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று காலை நடுவனந்தல் கிராமத்தில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் வட்டாட்சியர் அலெக்சாண்டர் முன்னிலையில் பிரேத பரிசோதனைக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு வந்த மருத்துவ குழுவினர் குழந்தையை தோண்டி எடுத்து அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

The post 7 மாத சிசு உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை appeared first on Dinakaran.

Related Stories: