2 நாள் பயணமாக சென்னை வரும் அமித்ஷாவை இன்று இரவு சந்தித்து பேசுகிறார் எடப்பாடி: ஓபிஎஸ்சும் சந்திக்க நேரம் கேட்டுள்ளதால் பரபரப்பு; நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

சென்னை: தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக இன்று இரவு சென்னை வரும் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஓபிஎஸ்சும் நேரம் கேட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 9 ஆண்டுகால சாதனையை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பாஜ பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வேலூர் பள்ளிக்கொண்டா அருகே கந்தநேரியில் நாளை (11ம் தேதி) பாஜ சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, வி.கே.சிங் பங்கேற்க உள்ளனர். இதற்காக, உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு 9 மணியளவில் சென்னை வருகிறார். சென்னை வரும் அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். அப்போது அவர் பாஜ தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் பாஜ தலைவர்களான அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தொடர்ந்து, கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜ தரப்பில் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த சந்திப்பின் போது பாஜ போட்டியிட நினைத்துள்ள தொகுதிகளின் விவரங்கள் குறித்து தெரிவிக்கப்படும் என்றும் தெரிகிறது. அதே நேரத்தில் பாஜ போட்டியிட நினைக்கும் தொகுதிகளில் அதிமுகவுக்கு அதிக செல்வாக்கு உள்ள பல தொகுதிகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அதிமுக சம்மதிக்கும் பட்சத்தில் உடனடியாக தேர்தல் வேலைகளை தொடங்க பாஜ முடிவு செய்துள்ளது.

மேலும், சென்னை வரும் அமித்ஷாவை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரம் கிடைக்கும் பட்சத்தில் அவரும் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ்சை ஒருபோதும் கட்சியில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி கறாராக இருந்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் ஒரு துரோகி என்றும் அவர் விமர்சனம் செய்து வருகிறார். அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் அமித்ஷாவை சந்திக்க ஓபிஎஸ்சுக்கு நேரம் கொடுக்கும் பட்சத்தில் 2 பேரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அமித்ஷா பஞ்சாயத்து செய்வார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ஓபிஎஸ் சந்தித்து பேச அமித்ஷா நேரம் ஒதுக்குவாரா அல்லது சந்திப்பதை புறக்கணிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், அமித்ஷா பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து, நாளை காலை தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜ நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் பள்ளிக்கரணையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று கட்சியினருக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.

ஒன்றிய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லி இப்போதே நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு காரில் சென்னை விமான நிலையம் செல்கிறார் அமித்ஷா. பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் வேலூர் புறப்பட்டு செல்கிறார். வேலூரில் நடைபெறும் பாஜ பொதுக்கூட்டத்திலும் அமித்ஷா பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த இரு நிகழ்ச்சிகளையும் முடித்து விட்டு டெல்லி புறப்பட்டு செல்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு ஆண்டு கூட இல்லாத நிலையில், அமித்ஷாவின் தமிழக பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

2 நாள் நிகழ்ச்சிகள் விவரம்
* உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட்டு, இன்று இரவு 8.45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். பலத்த பாதுகாப்புடன் காரில் கிண்டி ஐடிசி சோழா ஓட்டலுக்கு சென்று தங்குகிறார்.
* நாளை (ஞாயிறு) காலை ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு கோவிலம்பாக்கம் ராணி மஹால் திருமண மண்டபத்தில் பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். மீண்டும் ஐடிசி சோழா ஓட்டலுக்கு திரும்புகிறார்.
* பின்பு ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை பழைய விமான நிலையம் வந்து பிற்பகல் 1.45 மணிக்கு ஹெலிகாப்டரில் வேலூர் செல்கிறார். வேலூர் நிகழ்ச்சி முடிந்து மீண்டும் மாலை 4.30 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.
* மாலை 4.40 மணிக்கு தனி விமானத்தில், சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் புறப்பட்டு செல்கிறார்.

The post 2 நாள் பயணமாக சென்னை வரும் அமித்ஷாவை இன்று இரவு சந்தித்து பேசுகிறார் எடப்பாடி: ஓபிஎஸ்சும் சந்திக்க நேரம் கேட்டுள்ளதால் பரபரப்பு; நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: