அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்..!

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச் செயலாளர் தேர்தலையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வு முன்பு ஒரு மாத இடைவெளிக்கு பின் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதாடி வருகிறார். இந்நிலையில் இன்று ஐகோர்ட்டில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணை தொடங்கியது.

அப்போது; எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்; அதிமுக பொதுச் செயலாளர், கட்சி அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மாற்ற முடியாது. பொதுச் செயலாளர், கட்சி அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை எம்ஜிஆர் வகுத்தார். கட்சியின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்கும் வகையில் செயல்படுவதாக ஓ.பி.எஸ். குற்றம்சாட்டுவது தவறு. நிரந்தர பொதுச்செயலர் தேர்வாகும் வரை கட்சி நடவடிக்கைகளை கவனிக்கவே இடைக்கால பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கும். கடந்த 1972 முதல் 2017 வரை இருந்து வந்த பொதுச் செயலாளர் பதவியை தற்போது மீண்டும் கொண்டு வந்துள்ளோம். 2017 வரை பொதுச்செயலாளராக போட்டியிட உறுப்பினராக இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது.

தற்போது அடிமட்டத்தில் செல்வாக்கு பெற்றவர்கள் பொதுச்செயலர் தேர்தலில் போட்டியிட முடியும் என கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. அனைத்து தீர்மானங்களும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் தான் நிறைவேற்றப்பட்டது. கட்சி அலுவலகத்தில் பன்னீர்செல்வம் நுழைந்ததை அத்துமீறல் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது என்று வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்..! appeared first on Dinakaran.

Related Stories: