ராணிப்பேட்டை மாவட்டத்தில் ₹34.65 கோடி மதிப்பீட்டில் கட்டிய 4.0 தொழில் நுட்ப மையங்கள்

*காணொலி மூலம் முதல்வர் திறந்தார்

*அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் தலா ₹34.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில் நுட்ப மையங்களை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசு மற்றும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் இணைந்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாறிவரும் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தொழில் 4.0 தொழில்நுட்ப மையமாக தரம் உயர்த்தப்பட்டு தமிழ்நாடு முழுவதும் 22 தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டப்பட்டுள்ள தொழில் நுட்ப மையங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

அதன்படி ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரக்கோணம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலும் தலா ₹34.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4.0 தொழில் நுட்ப மையங்களை முதல்வர் திறந்து வைத்தார். அதில் ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில் பிரிவுகளான உற்பத்தி செயல்முறைகட்டுப்பாடு மற்றும் தொழில்துறை எந்திரனியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்பவியலாளர் மற்றும் மேம்படுத்தப்பட்ட சி.என்.சி இயந்திர தொழில்நுட்பவியலாளர் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் கருவிகள் உட்பட ₹34.65 கோடி செலவில் புதிய தொழில்நுட்ப மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மையத்தினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி குத்துவிளக்கு ஏற்றி மாணவர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். பின்னர் தொழிற்பயிற்சி மையத்தினை அமைச்சர் பார்வையிட்டு, ‘மாணவர்கள் நல்ல முறையில் இதனை பயன்படுத்திகொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் வளர்மதி, எம்.எல்.ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மேலாண்மைக்குழுத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சொக்கலிங்கம், நகர மன்ற துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா, தொழிற்பயிற்சி நிலைய கல்லுரி முதல்வர் பாபு, நகரமன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரக்கோணம் அரசு தொழிற் பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் அன்புசெல்வி தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன், நிலைய மேலாண்மை குழு தலைவர் அரிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் சந்தியா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக அரக்கோணம் ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா சவுந்தர், நகராட்சி தலைவர் லட்சுமி பாரி ஆகியோர் கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றி, இனிப்பு வழங்கினர். இதில், ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ராணிப்பேட்டை மாவட்டத்தில் ₹34.65 கோடி மதிப்பீட்டில் கட்டிய 4.0 தொழில் நுட்ப மையங்கள் appeared first on Dinakaran.

Related Stories: