சேலம்காரரை கண்டித்து போஸ்டர் ஒட்ட கூட தேனியின் அனுமதிக்காக காத்திருக்கும் நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘எந்த விஷயத்துக்கு பர்மிஷன் வாங்குவது என்பது கூட தெரியாமல் இருக்கும் கட்சி தொண்டர்களும், தலைவரின் நிலையை பற்றி சொல்லுங்களேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி சிட்டியில் தேனிக்காரர் குரூப் திடீரென சேலத்துக்காரருக்கு கண்டனம் தெரிவிச்சு போஸ்டர் ஒட்டினாங்களாம். இதை சேலத்துக்காரரின் ஆதரவாளர்கள் ெசமையா கலாய்ச்சாங்களாம். 20 நாட்களுக்கு முன்னாடி தேனி குரூப்பின் ஆலோசனை கூட்டம் மாங்கனி மாவட்டத்துல நாலஞ்சு இடங்களில் நடந்ததாம். இதில் சேலத்துக்காரரின் சொந்த ஊரில் நடந்த கூட்டத்துக்கு பெங்களூர்காரர் போயிருக்காரு. அவர் மீது காட்டமாக இருந்த சேலத்துக்காரரின் ஆதரவாளர்கள் காரை வழிமறிச்சு, வார்த்தைகளால் அர்ச்சனை செய்தாங்களாம். ஒரு கட்டத்தில் அடிக்கவும் போனாங்களாம். இந்த சம்பவத்தை கோர்வையாக எழுதி போலீசில் புகாராக கொடுத்துள்ளாராம் பெங்களூர்காரர். இந்நிலையில் நேற்று பெங்களூர்காரர் தாக்கப்பட்டற்கு கண்டனம் தெரிவிச்சு ேபாஸ்டர்கள் முளைச்சிருக்கு. வைத்தியானவர் வீட்டு திருமணத்தின்பாதுதான், எதிர்த்து போஸ்டர் ஓட்டுவதற்கு தேனிக்காரர் பர்மிஷன் கொடுத்தாராம். இதைத்தான் சேலம் குரூப் கலாய்க்குதாம். ஒரு ேபாஸ்டர் ஒட்டுறதுக்கு பர்மிஷன் கொடுக்கவே அவங்க தலைவரு, 20நாள் எடுத்திருக்காரு. இவரை நம்பி ஒட்டு மொத்த இலைகட்சியையும் கொடுத்தா அம்போதான்னு கலாய்ச்சாங்களாம் சேலம் குரூப்… ஒரு போஸ்டர் விஷயத்துல 20 அனுமதிக்க தாமதம் என்பதை ஜீரணிக்க முடியாமல் தேனிகாரரின் ஆதரவாளர்களே ஆதங்கத்தில் இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘என்ன தமிழ்நாட்டுல தாமரை ஆதரவு அதிகாரிங்க முளைச்சிருக்காங்களா என்ன…’’ ஆச்சர்யத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகராட்சியில் நகர்நல அலுவலர் பதவியில் ஐந்து எழுத்து பெயர் கொண்ட ஒரு மருத்துவர் உள்ளார். இவர், மாநகரில் சுகாதார பணி மேம்பாடு தொடர்பாக கவனம் செலுத்தாமல், எந்தெந்த அதிகாரி பற்றி, யார் யாரிடம் போட்டுக்கொடுக்கலாம் என்பதையே தன் டாக்டர் தொழிலின் முக்கிய சேவையாக வைத்துள்ளாராம். சமீப காலமாக, அதிகாரிகள் மட்டத்தை தாண்டி, கவுன்சிலர்கள் பக்கமும் வலை விரித்துள்ளாராம். மாநகராட்சியில் உள்ள எந்த கவுன்சிலரும் எனது அறைக்குள் வரக்கூடாது, எந்த கோரிக்கை மனுவும் என்னிடம் கொடுக்கக்கூடாது என முகத்தில் அறைந்தாற்போல் சொன்னாராம். அத்துடன், சுகாதார குழு கூட்டம் மாதம் ஒருமுறை கூடி, சுகாதார பிரச்னை பற்றி விவாதிப்பதையும் தடுத்து விட்டாராம். மாதாந்திர கூட்டம் போட வேண்டிய அவசியமே இல்லை எனக்கூறி இக்குழுவினரையும் மிரட்டுகிறாராம். மாநகராட்சி சுகாதார குழுவே தேவையில்லை. இக்குழுவை டம்மி செய்யும்படி அரசிடமிருந்து எனக்கு உத்தரவு வந்துள்ளது என நெத்தியடி அடிக்கிறாராம். மாநகர வீதிகளில் குப்பை அகற்றுதல், புதிதாக குப்பை தொட்டி வைப்பது போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை, யாரேனும் கொடுத்தால், அதை பரிசீலனைகூட செய்வதில்லையாம். மாறாக, தாமரை கட்சியினர் ஏதேனும் கோரிக்கை மனு கொடுத்தால், அதை முதல் ஆளாக நின்று செய்துகொடுக்கிறாராம். இந்த தாமரைக்கட்சி அதிகாரி பற்றிய செயல்பாடு மாநகராட்சியின் அனைத்து ஊழியர்களும் ஆச்சர்யத்துடன் பேசறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ அலுவலகத்தில் தினமும் லீலைகள் செய்த அதிகாரி கிலியில் இருக்கிறாராமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அதிகாரி ஒருவர், காதல் ரசம் சொட்ட சொட்ட தனது துறையில் பணியாற்றி வரும் பெண்ணிடம் ரெகுலராக பேசி வருகிறார். இது அங்குள்ள சக ஊழியர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம். இதை விட கொடுமை என்னவென்றால், தனி அறையில் அந்த பெண்ணிடம் அவர் பேசுகிறபோது, அந்த அறையின் வெளியே காவலுக்காக ஒரு பெண்ணையும் நிறுத்தி வைத்துள்ளார். யாராவது வந்து விட்டால், உடனே அந்த பெண் சிக்னல் கொடுத்து விடுவார். அந்த அதிகாரி உஷாராகி விடுவார். அதிகாரி லீலைகள் பல நாட்களாக நடந்து வருகிறது. சக பெண் ஊழியர்களுக்குள் மட்டும் தெரிந்த இந்த விவகாரம் தற்போது வெளியில் கசிந்தது. தினமும் பத்திரப்பதிவு நடக்கிறதோ இல்லையோ இந்த டாப்பிக் தான் அலுவலகம் முழுவதும் ஓடுகிறதாம். தற்போது மேட்டர் லீக் ஆக ஆசைப்பட்ட அதிகாரி அதிர்ச்சி கலந்த கிலியாக இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சாராய சாவு பற்றிய கூட்டத்தை மறந்து நாடாளுமன்ற தேர்தல் நினைப்பில் பாஜ புகழ் பாடிய இலை கட்சி மாஜி அமைச்சரை பற்றி சொல்லுங்களேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பூட்டு மாவட்டத்தின் மேற்குப்பகுதி இலைக்கட்சி சார்பில், சமீபத்தில் விஷச்சாராய உயிரிழப்பில் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி, உளறல் மாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், இவருக்கு எதிர் அரசியல் நடத்தும் முன்னாள் மேயர் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களும் பங்கேற்றாங்களாம். அப்போது தொண்டர்களில் சிலர், மாஜியிடம் பேப்பரில் சில வாசகங்களை எழுதித் தந்து கோஷம் எழுப்பச் சொல்லியிருந்தனர். அவரோ, அதை என்னவென்று கூட கடைசி வரை பார்க்காமல், தாமரை கட்சியினரே நெளியும் அளவுக்கு ஒன்றிய அரசை புகழ்ந்து ஓவராக பேசிக் கொண்டிருந்தாராம். ஒப்பாரி வைக்க வந்த இடத்துல ஹாப்பி பர்த்தடே பாட்டு பாடின மாதிரி இருந்துச்சாம். கூட்டத்துக்கு வந்திருந்த இலைக்கட்சி தொண்டர்களோ, ‘ஆர்ப்பாட்டம் எதுக்கு நடக்குது.. எதை பேசணும்னே தெரியாம இவர் பாட்டுக்கு ஒன்றிய அரசை பாராட்டுறாரே. இதை ஒருவேளை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம்னு நினைச்சுட்டாரோ… முன்பெல்லாம் சாதாரணமாக பேசும்போது, இறந்த தலைவர்களின் பெயர்களைத்தான் மாற்றிக் கூறுவார். இப்போது நிகழ்வையே மாற்றி பேசத்தொடங்கி விட்டாரே என புலம்பி வருகின்றனர். இவரது எதிர் முகாமிலிருந்து இதுதொடர்பான புகார் பட்டியல் தலைமைக்கு சென்றிருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post சேலம்காரரை கண்டித்து போஸ்டர் ஒட்ட கூட தேனியின் அனுமதிக்காக காத்திருக்கும் நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: