கடந்த ஆண்டை விட அதிகம் பொறியியல் கவுன்சலிங்கிற்கு 1.87 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: பொறியியல் கவுன்சலிங்கிற்கு 1.87 லட்சம் மாணவர்கள் விண்ணப்பத்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக 1 லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 18,610 பேர் விண்ணப்பித்துள்ளனர். 7.5 சதவீத ஒதுக்கீட்டு அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். இந்த ஒதுக்கீட்டில் இந்த ஆண்டு கூடுதலாக 7,852 விண்ணப்பங்கள் வந்துள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ், கடந்த 2 ஆண்டுகளாக பொறியியல் படிப்புகளுடன் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் கடந்த 2 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தவில்லை. அதனால் கல்லூரிகளில் படித்து முடித்த 9 லட்சத்து 26 ஆயிரத்து 542க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பட்டமளிப்பு சான்று பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு என்ன காரணம் என்றால், பட்டமளிப்பு விழாவுக்கு தமிழக ஆளுநர் தேதி கொடுக்காததுதான். பட்டமளிப்பு விழாவில் வட இந்தியாவை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் மத்திய அமைச்சர்களை அழைக்க ஆளுநர் விரும்புகிறார். பட்டமளிப்பு விழா நடத்த தமிழக அரசின் தரப்பில் அனைத்து ஏற்பாடுகளையும் உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் ஆளுநர் தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும்

பாரதியார் பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தர் நியமனம் தொடர்பாக அரசு தரப்பில் மூன்று பேரை பரிந்துரை செய்து கடந்த அக்டோபர் மாதமே ஆளுநரிடம் பட்டியல் கொடுத்துள்ளோம். ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார். தமிழ் பொறியியல் பாடங்களை பொறுத்தவரையில் சிவில் மற்றும் மெக்கானிக் பாடப் பிரிவுகளுக்கு தமிழ் மொழியில் புத்தகங்கள் வெளியான நிலையில் பிற பாடப்பிரிவுகளுக்கும் தமிழ் மொழியில் புத்தகங்களை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 70 புத்தகங்கள் தயாராகி இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

The post கடந்த ஆண்டை விட அதிகம் பொறியியல் கவுன்சலிங்கிற்கு 1.87 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்: அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: