சதுரங்கப்பட்டினத்தில் பெரியபாளையத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருக்கழுக்குன்றம்: சதுரங்கப்பட்டினம் ஸ்ரீசியாமளா தேவி அம்மன் மற்றும் பெரியபாளையத்து அம்மன் ஆகிய கோயில்களில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் மீனவர் குப்பம் வடக்கு பகுதியில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சியாமளா தேவி அம்மன் மற்றும் பெரியபாளையத்து அம்மன் ஆகிய கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களை புனரமைப்பு செய்து, மகா கும்பாபிஷேகம் செய்ய ஊர் பொதுமக்களால் முடிவு செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், பணிகள் முடிவுற்றதையடுத்து யாகசாலை அமைத்து கும்ப கலசங்கள் நிறுவி, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா தீபாரதனையுடன் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு மூன்று கால பூஜைகள் நடத்தப்பட்டு, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கும்ப கலசங்களில் புனித நீரை கோபுர கலசங்கள் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, மூலவர் சியாமளா தேவி அம்மன் மற்றும் பெரியபாளையத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இந்த கும்பாபிஷேகத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post சதுரங்கப்பட்டினத்தில் பெரியபாளையத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: