சிரிக்க ஏன் மறந்தோம்

உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களில் இருந்தும் மனிதனை வேறுபடுத்தியும், மேம்படுத்தியும் காட்டுவது சிரிப்பு. இந்த சிரிப்பு என்ற சிறப்பு மட்டும் இல்லாவிட்டால் மனிதர்களின் பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்திருக்காது. காதல் என்ற சொல்லே இலக்கியத்தில் காணாமல் போயிருக்கும். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான ராஜா ராணி திரைப்படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிரிப்பின் சிறப்பை விவரித்து பாடும் பாடல் இன்னும் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் மனிதர்களுக்கு பாடமாக அமையும்.

அதில் அவர், சிரிப்பு… இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு. மனம் கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக்காட்டும் கண்ணாடி சிரிப்பு. இது களைப்பை நீக்கிக் கவலையைப் போக்கி மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு என்று அருமையாக சிலாகித்து பாடியிருப்பார். பணத்தின் பின்னால் மனிதன் ஓடுகின்ற காலத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து நலம் விசாரித்து சிரித்து மகிழக்கூட நேரம் கிடைப்பதி்ல்லை. வீட்டில் உறவினர்கள் வருகை, பொழுதுபோக்கு உற்சாகம் ஆகியன மறைந்துவருகின்றன. எப்போதும் மனிதன் மன அழுத்தத்துடனே ஏதோ கவலையுடன் சுற்றி வருகிறான்.

இப்படி மனிதனின் ஆத்ம அடையாளமாக திகழும் சிரிப்பைத்தான் ஜப்பான் நாட்டு மக்கள் மறந்துவிட்டார்களாம். தொலைந்ததை தேட வேண்டும். மறந்ததை நினைவூட்ட வேண்டும் என்ற விதியின்படி தற்போது அவர்களுக்கு சிரிப்பது எப்படி என்று நினைவூட்டி வருகிறார்களாம். வேடிக்கை என்று நினைக்காதீர்கள். உண்மை தான். உலகளவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று உச்ச கட்டத்தை எட்டி லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனால், மக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இதன் தாக்கத்தால் ஜப்பானியர்கள் சிரிக்கவே மறந்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. கொரோனா தொற்றால் ஏற்பட்ட தாக்கம் மட்டுமல்லாமல், கொரோனா பரவாமல் இருக்க அவர்கள் கடைபிடித்த மாஸ்க் அணியும் பழக்கம் தான் சிரிப்பை மறக்க முதல் காரணம் என்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக மாஸ்க் அணிந்து அவர்கள் சிரிக்கவே மறந்துவிட்டார்களாம். ஜப்பானிய அரசு கொரோனா தொற்று கட்டுப்பாடு விதியில் இருந்து மாஸ்க் அணிவதற்கு விலக்கு அளித்தபோதும், இன்னமும் பலர் மாஸ்க் அணிந்துதான் வெளியே செல்கிறார்கள். அங்கு 8 சதவீத மக்கள் மட்டுமே மாஸ்க் அணிவதை நிறுத்தியுள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து டோக்கியோவில் உள்ள கலை கல்வி நிறுவனம் ஒன்று சிரிக்க மறந்த ஜப்பானிய மக்களுக்கு சிரிக்க கற்றுக்கொடுக்கும் வகுப்புகளை எடுத்து வருகிறது. ரேடியோவில் தொகுப்பாளராக பணியாற்றிய பெண் ஒருவர் இந்த வகுப்பை எடுத்து வருகிறார். இந்த வகுப்பிற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 4,550 செலுத்தி ஜப்பானிய மக்கள் பலர் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்கள் என்பது தான் ஹைலைட். கையில் கண்ணாடி ஒன்றை வைத்துக் கொண்டு அவர்கள் சிரிக்க பயிற்சி எடுக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்றார்கள். இப்படி இருக்க சிரிக்க ஏன் மறந்தோம் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது தான்.

The post சிரிக்க ஏன் மறந்தோம் appeared first on Dinakaran.

Related Stories: