ஒற்றைத் தலைமையால் கட்சி பழையநிலைக்கு திரும்பியது; பதவிப் பசி காரணமாக ஓ.பி.எஸ். மேல்முறையீடு; அதிமுக வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகளின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்குகளின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஏற்கனவே ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றுள்ளது. ஒற்றை தலைமைக்கு மாறியது கட்சி விதிகளுக்கு முரணானது. ஓபிஎஸ் உள்பட 4 பேரை நீக்கியது சட்ட விரோதமானது என அச்சமயம் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக, இபிஎஸ் தரப்பு வாதங்கள் தொடங்கின. உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணை நடைபெற்றது.

பொதுக்குழு முடிவுகளே இறுதியானது:

எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதங்களை முன்வைத்து வருகிறார். பொதுக்குழு அதிகாரம் குறித்து பேசிய அவர், கட்சி விவகாரங்கள் தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே இறுதியானது. கட்சியின் அனைத்து முடிவுகளையும் அடிப்படை தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது என தெரிவித்தார்.

கட்சியின் விதிகளுக்கு மேலானவர்கள் யாருமில்லை:

கட்சியின் விதிகளுக்கு மேலானவர்கள் யாருமில்லை. கட்சி விதியை மீறினால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மீதே நடவடிக்கை எடுக்க முடியும். கட்சியின் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களை மட்டுமே பொதுக்குழு தீர்மானிக்க முடியும் என்பதல்ல. ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என கூறினார்.

உச்சபட்ச அதிகாரம் கொண்டது பொதுக்குழு:

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை விட உச்சபட்ச அதிகாரம் கொண்டது பொதுக்குழு என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் முன்வைத்து வருகிறது. அதிமுக உறுப்பினர்கள் முதல் நிர்வாகிகள் வரை கட்சி விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். தமிழகம் முழுவதும் தனியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார் ஓபிஎஸ் என தெரிவித்தார்.

ஒபிஎஸ் எப்படி நிவாரணம் கோர முடியும்?:

தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் தனியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். தனியாக நிர்வாகிகளை நியமிக்கும் ஓபிஎஸ் எப்படி கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து நிவாரணம் கோர முடியும்? என தெரியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் எம்.எல்.ஏ-வாக செயல்படுவதில் இருந்து மனுதாரர்களுக்கு எப்படி பாதிப்பை ஏற்படுத்தியது என்பது விளக்கப்படவில்லை. பொதுக்குழு எப்படி முடிவு எடுக்கலாம் என்ற வாதத்தை உயர்நீதிமன்ற இருநீதிபதிகள் அமர்வு, உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது என்றும் வாதிட்டார்.

ஓ.பி.எஸ். தரப்பினரால் கட்சி செயல்பாடு முடங்கியது:

ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செயல்பாட்டால் கட்சி செயல்பாடு முடங்கிவிட்டது. ஓ.பி.எஸ். தரப்பினரால் கட்சி செயல்பாடு முடங்கியது என்ற வாதத்தை உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள், அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யப்படுகின்றனர் என்று எடப்பாடி தரப்பு வாதம் முன்வைத்தது.

அடிப்படைஉறுபினர்களின் பிரதிநிதியே பொதுக்குழு உறுப்பினர்:

அடிப்படை உறுப்பினர்களால்தான் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதிகளாகவே பொதுக்குழு உறுப்பினர்கள் செயல்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது தவறு:

உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது தவறு என் று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று அதிமுக தரப்பு வாதிட்டது. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்தப் பிழையும் இல்லை என்றும் வழக்கறிஞர் கூறினார்.

கட்சி செயல்பாடுகளை முடக்கவே மனு தாக்கல்:

கட்சி செயல்பாடுகளை தொடர்ந்து முடக்கவே மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓ.பி.எஸ். வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒற்றைத் தலைமை கட்சி விதிகளுக்கு எதிராக இல்லை:

ஒற்றைத் தலைமை கட்சி விதிகளுக்கு எதிராக இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. கட்சி அடிப்படை விதிகளை மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. கட்சியின் எந்த விதி மீறப்பட்டது என குறிப்பிட்டு குற்றஞ்சாட்டவில்லை. கட்சி செயல்பாடு தொடர்ந்து முடங்க வேண்டும் என்பதற்காக மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று இபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியது.

பதவிப் பசி காரணமாக ஓ.பி.எஸ். வழக்கு:

நிர்வாகிகளை நியமித்து கட்சி நடத்தும் நபர் வைக்கும் வாதங்கள் பதவிப்பசி காரணமாக வைக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் தலைவராக, முதல்வராக இருந்திருக்கலாம்; ஆனால் மக்களின் விருப்பப்படியே கட்சி தொடர வேண்டும். அனைத்து நடவடிக்கைகளும் கட்சி நலன் கருதியே எடுக்கப்பட்டன என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒற்றைத் தலைமையால் கட்சி பழையநிலைக்கு திரும்பியது:

ஒற்றைத் தலைமையை மீண்டும் கொண்டு வந்ததன் மூலம் கட்சியின் பழைய நிலை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் பொதுக்குழுவை கூட்டும்போது 7 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு நாளை ஒத்திவைப்பு:

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல்முறையீடு வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஒபிஎஸ் தரப்பின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நாளை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயண் நாளை ஆஜராகி வாதங்களை முன்வைக்க உள்ளார்.

The post ஒற்றைத் தலைமையால் கட்சி பழையநிலைக்கு திரும்பியது; பதவிப் பசி காரணமாக ஓ.பி.எஸ். மேல்முறையீடு; அதிமுக வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: