ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் இது நம்ம கட!..

வழிவழியாக உணவகம் நடத்துபவர்கள் உண்டு. அல்லது சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆவலில் உணவகம் நடத்துபவர்களும் உண்டு. ஆனால், முழுக்க முழுக்க ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்காக, ஓர் உணவகத்தை தொடங்கி, இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சி.ஏ.பட்டதாரியான சுப்பிரமணியன். சென்னை, திருமங்கலம் பகுதியிலுள்ள எச்.பி. பெட்ரோல் பங்க் அருகில் அமைந்துள்ளது இவரது, இது நம்ம கடை உணவகம். காலை ஒன்பது மணிக்கு சிற்றுண்டியில் தொடங்கி இரவு 11 மணி வரை பரபரப்பாக இயங்கி வரும் இந்த உணவகத்தின் சுவைக்கென்றே தனி ரசிகர் வட்டம் உண்டு. இந்த உணவகம் பிறந்த கதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சுப்பிரமணி…‘‘எனது பூர்வீகம், ஆந்திரா எல்லையில் உள்ள சத்தியவேடு கிராமம். அப்பா லாரி டிரைவர். அம்மா சின்னதாக இட்லிக் கடை நடத்தி வந்தார். அவர்களின் சொற்ப வருமானத்தில்தான் தட்டுத்தடுமாறி சி.ஏ. வரை படிக்க முடிந்தது.

பள்ளிப் பருவத்தில் இருந்தபோது, ஒவ்வொரு முறையும் பள்ளிக்கட்டணம் கட்ட, அம்மாவும், அப்பாவும் பட்ட பாட்டை பார்த்து வளர்ந்தவன் நான். எனவே, அப்போதே, என்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்கான சந்தர்ப்பம், தற்போதுதான் அமைந்தது.நான் வசித்து வரும் அண்ணா நகர் பகுதியில், எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஏழைக் குழந்தைகள் சிலர் கொரோனா பாதிப்புக்கு பின், பள்ளிக் கட்டணம் கட்ட முடியாமல் தவிப்பதைப் பார்த்தேன். அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்களின் பள்ளிக் கட்டண தொகை செலுத்துவதில் என்னால் முடிந்த உதவிகளை செய்தேன். பின்னர், மெல்ல மெல்ல குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. எனவே, நமது கரங்கள் என்று சேவை அமைப்பு ஒன்று தொடங்கினேன். அதன்மூலம், கல்வி உதவி மட்டுமில்லாமல், பலருக்கும் பல உதவிகளை செய்யத் தொடங்கினேன். வருடப் பிறப்பு, பண்டிகை நாள்களில் சாலையோரத்தில் ஆதரவற்று இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் என பலருக்கும் ஆடைகள் வழங்கி வருகிறேன்.

அவ்வப்போது உணவு பொட்டலங்களும் வழங்குவேன். இதற்கெல்லாம் எனக்கு நிதி தேவைப்பட்டது. அதை பூர்த்தி செய்யவே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த உணவகத்தைத் தொடங்கினேன்.உணவகத்தில் கிடைக்கும் வருமானம் முழுவதையும் அமைப்புக்காகவே, செலவிட்டு வருகிறேன். அதுபோன்று, முதிய வயதில் உணவருந்த வருபவர்களிடம் பணம் கேட்பதில்லை. அவர்களாக ஏதாவது கொடுத்தால் வாங்கிக்கொள்வேன். இதற்காகத்தான் இந்த உணவகத்துக்கு, இது நம்ம கடை என பெயரிட்டேன்.கடந்த ஆண்டு வரை, 32 குழந்தைகள் பயன்பெற்று வந்தனர். இந்த ஆண்டு மேலும் கூடுதலாகி, 45 குழந்தைகளாகி உள்ளனர். அவர்களுக்கு பள்ளியின் முழுக் கட்டணமும் நான் கொடுப்பதில்லை. அவர்களின் பெற்றோரால் எவ்வளவு சமாளிக்க முடிகிறதோ அதற்கு மேல் தேவைப்படும் தொகையை மட்டுமே நான் வழங்கி வருகிறேன். ஒரு சிலருக்கு முழுக் கட்டணமும் வழங்குவேன். உதவிக்காக தொடங்கப்பட்ட உணவகமாக இருந்தாலும், உணவில் எந்த குறைபாடும் இல்லாமல் தரமானதாக வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

எனவே, சமையலுக்கு தேவையான மசாலா முழுவதையும் எந்த கலப்படமும் இல்லாமல், நானே பார்த்து பார்த்து அரைத்து வைத்துக் கொள்வேன். அப்போதுதான் உணவகம் நீடித்திருக்கும். காலை உணவாக, இட்லி, தோசை, பூரி, சிக்கன் கறி தோசை, பொடி தோசை இருக்கும். மதியத்தில், ஹைதராபாத் தம் பிரியாணி, சிக்கன் தொக்கு, மீன் வறுவல், தலைக்கறி, போட்டி குழம்பு, முட்டை மசாலா, சிக்கன் குழம்பு, மீன் குழம்பு போன்றவை இருக்கும். மதியம் மீல்ஸ் 50 ரூபாய் விலையில், அன்லிமிடெட் வழங்குகிறேன். அதில், சாதம், சிக்கன் குழம்பு, மீன் குழம்பு, சாம்பார், மோர்க்குழம்பு, பொரியல், ரசம், அப்பளம் இருக்கும். மற்றவற்றிற்கு தனித்தனி விலை. எல்லாமே குறைவான விலைதான். உதாரணமாக, மீன் வறுவல் என்று எடுத்துக் கொண்டால் 15 ரூபாய் தொடங்கி அதிகபட்சமே 40 ரூபாய்தான். அதிலும், அயிலா, பாறை, கோலா போன்ற ஒற்றை முள்ளுள்ள மீன்கள் தான் கொடுக்கிறோம்.

சிக்கன் தொக்கு 70 ரூபாய்.இரவில், இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, சிக்கன் கறி தோசை, மஷ்ரூம் தோசை, ஊத்தப்பம், மசாலா ரைஸ் போன்றவை இருக்கும். இந்த உணவுகளை தயாரிக்க ஆந்திராவில் இருந்து இரண்டு மாஸ்டர்களை அழைத்து வந்திருக்கிறேன். சமையல் முழுவதையும் அவர்கள்தான் கவனிக்கிறார்கள். அவர்களின் குழந்தைகளின் படிப்புச் செலவையும் நானே பார்த்துவருகிறேன்.நம்ம உணவகத்தின் ஸ்பெஷல் ஹைதராபாத் பிரியாணிதான். 12 மணிக்கு எடுத்து வைத்தால், 2 மணிக்கெல்லாம் விற்று தீர்ந்துவிடும். மதியத்தில் மட்டும் சுமார், 100 முதல் 150 பேர் வரை சாப்பிடுகிறார்கள். ஒருநாளைக்கு மூன்று வேளையும் சேர்த்து, குறைந்தது 200-250 பேர் வரை சாப்பிடுகிறார்கள். குழந்தைகள் அதிகரிக்க அதிகரிக்க, இந்தக் கடையில் கிடைக்கும் வருமானம் போதவில்லை. மேலும், விலைவாசி ஏற்றமும் வருமான பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. எனவே, சி.ஏ. கன்சல்டன்ட் நிறுவனத்தில் கிடைக்கும் வருமானத்திலும் என் குடும்ப செலவுகள், தேவைகள் போக மீதமிருக்கும் வருமானத்தை இதில்தான் போட்டுவருகிறேன். இதற்காக, இதுவரை யாரிடமும் எந்த உதவியையும் பெறாமல்தான் நடத்தி வந்தேன். தற்போது, சமீபமாக, இந்தக் கடையைப் பற்றி கேள்விப்பட்டு மைம் கோபி போன்ற திரை பிரபலங்கள் பலர் உதவ முன் வருகிறார்கள். இதனால், மேலும் சில குழந்தைகளுக்கு உதவ முடிகிறது’’ என்கிறார்.

தேவி

The post ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் இது நம்ம கட!.. appeared first on Dinakaran.

Related Stories: