`அரிசி கொம்பன்’ இன்று அதிகாலை குமரி வனப்பகுதிக்குள் நுழைய முயற்சி: கண்காணிப்புகுழு, வனத்துறையினர் தடுப்பு நடவடிக்கை

களக்காடு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரிசி கொம்பன் யானை அட்டகாசம் செய்து வந்தது. இந்நிலையில் கடந்த 27ம் தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் அரிசி கொம்பன் யானை புகுந்தது. நகரின் முக்கிய தெருக்களில் உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி அதிகாலையில் அரிசி கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதன்பிறகு அரிசி கொம்பன் யானையை நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே மாஞ்சோலை வழியாக கொண்டு சென்று பின்னர் மேல் (அப்பர்) கோதையாறில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள முத்துக்குழி வயல் வனப்பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை விடப்பட்டது.

இருப்பினும் யானையின் நடமாட்டம் மற்றும் அதன் உடல்நிலை குறித்து கடந்த 2 நாட்களாக தேனி, ஒசூர் பகுதியைச் சேர்ந்த 13 பேர் கொண்ட வனத்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் அங்கு முகாமிட்டு கண்காணித்தனர். இந்நிலையில் அகத்தியமலை அடர்வனப்பகுதியில் அலைந்து திரியும் அரிசிக்கொம்பன் யானையை குமரி மாவட்ட வனத்துறையினரும், நெல்லை மாவட்ட வனத்துறையினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ‘யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க அதன் கழுத்தில் ரேடியோ காலர் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு அதனை வைத்து அரை மணி நேரத்திற்கு ஒருமுறை யானை எங்குள்ளது?, அது எந்த பகுதியை நோக்கி செல்கிறது? என்று கண்காணிக்கப்படுகிறது.

அப்பர் கோதையாறு மலைப்பகுதிக்குள் அகத்தியமலை முத்துக்குழி வயல் பகுதியில் விடப்பட்டுள்ள அரிசிக்கொம்பன், வனப் பகுதியில் குறிப்பிட்ட தூரத்திற்குள் தான் சுற்றி வந்தது. இந்நிலையில் இன்று (வியாழன்) அதிகாலை அரிசி ெகாம்பன் யானை, முத்துக்குழி வயல், வழியாக குட்டியாறு அணைப்பகுதியில் இருந்து கன்னியாகுமரி பேச்சிப்பாறை, நெய்யாற்றின்கரை வழியாக கேரள வனப்பகுதிக்குள் நுழைய முயன்றது ரேடியோ காலர் கருவி மூலம் தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே கண்காணிப்பு குழுவினர் மற்றும் களக்காடு, திருக்குறுங்குடி வனத்துறையினர், அரிசி கொம்பனை தடுத்து கோதையாறு பகுதியில் மீண்டும் திரும்புமாறு விரட்டினர். இதையடுத்து தற்போது அரிசி கொம்பன், நெல்லை மாவட்டம் கோதையாறு குட்டியாறு அணைப்பகுதியில் சாந்தமாக நடமாடி வருகிறது. தொடர்ந்து ஜிபிஎஸ் கருவி மூலம் யானையின் நடமாட்டம் மற்றும் உடல்நலம் குறித்து கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post `அரிசி கொம்பன்’ இன்று அதிகாலை குமரி வனப்பகுதிக்குள் நுழைய முயற்சி: கண்காணிப்புகுழு, வனத்துறையினர் தடுப்பு நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: