மேகதாது அணை விவகாரத்தில் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது: வைகோ பேட்டி

மதுரை: மேகதாது அணை விவகாரத்தில் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நிருபர்களிடம் கூறியதாவது: ரயில்வே துறை வரலாற்றில் ஒடிசா ரயில் விபத்து கொடூரமான, கோர விபத்தாகும். இந்த விபத்து தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்டதா அல்லது சதியா என்பது பிரச்னைக்குரியதாக உள்ளது. சதிச்செயலாக இருந்தால், அதனை செய்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. எனவே, விபத்து குறித்து தீவிரமாக ஆய்வு செய்து, உண்மையை கண்டுபிடித்து, விபத்துக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

மேகதாது அணை நிச்சயம் கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வர் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 12 வருடங்களுக்கு முன்பு ஆயிரம் பேரை திரட்டி நான் போராட்டம் நடத்தினேன். அப்போது மேகதாதுவில், அணையை கட்டியே தீருவோம் என அப்போதைய கர்நாடக அரசு தெரிவித்தது. அணை கட்டுவதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டது. தற்போது அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது. மேகதாதுவில் அணை கட்டினால், அது தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும். கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கிடைக்காமல் தமிழகம் பஞ்ச பிரதேசமாக மாறி விடும். தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல் பேராபத்து காத்திருக்கிறது. இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு வஞ்சகம் செய்கிறது’’ என்றார்.

The post மேகதாது அணை விவகாரத்தில் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது: வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: