திருவண்ணாமலையில் பவுர்ணமி நாளில் பக்தர்களின் வசதிக்காக முதல்முறையாக சிறப்பு ரயில்: அடுத்த மாதம் சென்னைக்கு இயக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பவுர்ணமி நாளன்று சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் அனுமதித்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் செல்கின்றனர். இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் அதிகளவு பக்தர்கள் வருவதால் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பக்தர்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்திருந்தனர்.

இதுதொடர்பாக எம்பி சி.என்.அண்ணாதுரை, ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்திருந்தார். அதோடு, சமீபத்தில் திருச்சியில் நடந்த தெற்கு ரயில்வே ஆலோசனைக் கூட்டத்திலும் வலியுறுத்தினார். அதன் தொடர்ச்சியாக, வரும் ஜூலை மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை பவுர்ணமி சிறப்பு ரயில்களை இயக்குவதற்கான கால அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை வரும் ரயில், பவுர்ணமி நாளன்று திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னையில் இருந்து விழுப்புரம் வரும் ரயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து பவுர்ணமி நாட்களில், காட்பாடி மற்றும் விழுப்புரம் இன இரு வழித்தடங்களில் சென்னைக்கு நேரடி ரயில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பவுர்ணமி நாட்களில் சென்னையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரும் ரயில், அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கம், ஆரணி ரோடு, போளூர், அகரம்சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும்.

திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் ரயில், வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திற்கு காலை 5.35 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து சென்னை செல்லும். விழுப்புரத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு காலை 11 மணிக்கு வரும். திருவண்ணாமலையில் பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு, பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

மேலும் விழுப்புரம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில், பவுர்ணமி நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரத்தில் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, திருவண்ணாமலைக்கு இரவு 10.45 மணிக்கு வந்தடையும். திருவண்ணாமலையில் அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரத்துக்கு காலை 5 மணிக்கு சென்றடையும். பின்னர், அங்கிருந்து வழக்கம் போல மயிலாடுதுறை செல்லும். பவுர்ணமி நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்குவதாக வெளியான தகவல் பக்தர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

சிறப்பு ரயில் தேதிகள்
ஜூலை முதல் டிசம்பர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூலை 2, 3 மற்றும் 30, 31, ஆகஸ்டு மாதம் 30, 31, செப்டம்பர் 28, 29, அக்டோபர் 27, 28, நவம்பர் 26, 27, டிசம்பர் 25, 26 ஆகிய நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலையில் பவுர்ணமி நாளில் பக்தர்களின் வசதிக்காக முதல்முறையாக சிறப்பு ரயில்: அடுத்த மாதம் சென்னைக்கு இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: