தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையில் ரூ.80 கோடி மோசடி; சீட்டு கம்பெனியின் 6 இடங்களில் ரெய்டு: உரிமையாளர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

தர்மபுரி: தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் சீட்டு கம்பெனி நடத்தி சுமார் 80 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தம் 6 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. மேலும் உரிமையாளர்கள் 2பேரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் ஞானவேல் (46). பெங்களூரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தர்மபுரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பூனையானூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் அருண்ராஜ் (37), ஜெகன் (39) ஆகியோர் பெர்பெக்ட் விஷன் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற சீட்டு கம்பெனி நடத்தி வருகின்றனர். இந்த கம்பெனியில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் தினமும் ரூ.1500, ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் தினமும் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என கவர்ச்சிகரமான விளம்பரம் செய்தனர். இதனை நம்பி தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்தனர். அதன்படி நானும் ரூ.20 லட்சம் முதலீடு செய்தேன். இதில் ரூ.8 லட்சத்தை தந்துவிட்டனர். மீதி பணத்தை தரவில்லை. இந்த நிறுவனத்தின் தலைமை இடம் ஓசூரில் உள்ளது.

போச்சம்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம் ஏலகிரி, தர்மபுரி, பூனையானூர் உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் ரூ.80 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளது. இதுபற்றி நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தரவேண்டும் என தெரிவித்திருந்தார். இதுபற்றி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை முதல் தர்மபுரி பென்னாகரம் ரோட்டில் மேம்பாலம் அருகே உள்ள சீட்டு கம்பெனியின் அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி அங்கீத் ஜான் உத்தரவுப்படி நாமக்கல் டிஎஸ்பி சிவக்குமார் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி பூனையானூர், போச்சம்பள்ளி, ஏலகிரி, ஓசூர் உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் உரிமையாளர்களான அருண்ராஜ், ஜெகன் ஆகியோரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையில் ரூ.80 கோடி மோசடி; சீட்டு கம்பெனியின் 6 இடங்களில் ரெய்டு: உரிமையாளர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: