மக்களுக்கு இடையூறு ஏற்படும் சூழல்: சென்னை எழும்பூர் – கடற்கரை வரை 4வது ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றியமைக்க தென்னக ரயில்வே முடிவு..!!

சென்னை: சென்னை எழும்பூர் முதல் சென்னை கடற்கரை வரை 4வது ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அடுத்த முக்கிய ரயில் நிலையமாக எழும்பூர் இருந்து வருகிறது. சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போக்குவரத்து தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், பிற மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களும் சென்னை எழும்பூருக்கும், தாம்பரம் முனையம் போன்ற பிற இடங்களுக்கும் இயக்கப்படுகின்றன.

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4.3 கி.மீ. தொலைவுக்கு 4வது புதிய பாதை அமைக்கும் திட்டத்துக்கு நடப்பாண்டில் மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில்பாதை திட்டப்பணிகளை விரைவில் தொடங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனிடையே, 4வது வழித்தட பணிகளுக்காக, வேளச்சேரி – சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் மேம்பால மின்சார ரயில்கள் வரும் ஜூலை 1 முதல் ஜனவரி 31 வரை, 7 மாதங்களுக்கு சேப்பாக்கம் வரை மட்டுமே இயக்க முடிவு செய்யப்பட்டது.

பயணியருக்கு பெரிய பாதிப்பு இல்லாமல், மேம்பால ரயில் சேவையை இயக்குவது குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில், சென்னை எழும்பூர் முதல் சென்னை கடற்கரை வரை 4வது ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழித்தட பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவையை ரத்து செய்வதால் மக்களுக்கு இடையூறு ஏற்படும் சூழல் நிலவுவதால் ரயில்பாதை திட்டத்தை மாற்றியமைக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.

The post மக்களுக்கு இடையூறு ஏற்படும் சூழல்: சென்னை எழும்பூர் – கடற்கரை வரை 4வது ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றியமைக்க தென்னக ரயில்வே முடிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: