திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாப பலி

திண்டிவனம், ஜூன் 8: திண்டிவனம் அருகே கோயில் திருவிழாவிற்கு மின்விளக்கு கட்டிய இரும்பு கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து மாணவன் உயிரிழந்தான். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள பந்தாடு கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக தெருவில் கம்பங்கள் நடப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அதே கிராமத்தை சேர்ந்த மைக்கேல் ராஜ் மகன் நித்திஷ்குமார் (12), திண்டிவனம் அரசு உதவி பெறும் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான்.

இவன் நேற்று முன் தினம் இரவு விளையாடிக் கொண்டிருந்தபோது திருவிழாவுக்காக தெருக்களில் மின்விளக்கு கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பத்தை தொட்டபோது எதிர்பாராதவிதமாக அவன் மீது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான். அவனை மீட்டு ஆவணிப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவன் நித்திஷ்குமார் உயிரிழந்தான். தகவலறிந்த பிரம்மதேசம் போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: