தொடரும் அத்துமீறல்

‘ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லாதது’ என்றார் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா. அதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் இருக்கின்றன.
பொதுவாக, ஆளுநர் பொறுப்பில் உள்ளவர்கள், மாநில வளர்ச்சி பற்றிதான் பேசுவது வழக்கம். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவியோ, பாஜ மாநில தலைவர் போல ஒன்றிய அரசை பாராட்டி பேசுவதும், தமிழ்நாடு அரசை விமர்சித்து பேசுவதையுமே வழக்கமாக கொண்டுள்ளார். எங்கு சென்றாலும் ‘சனாதன தர்ம வகுப்பு’ எடுக்காமல் தனது உரையை அவர் முடித்ததில்லை.

ஏற்கனவே, தமிழ்நாடு என கூறக்கூடாது, தமிழகம் என்றுதான் கூற வேண்டுமென்ற அவரது கருத்து, தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தியா மற்ற நாடுகளை போல மன்னர்கள், ராணுவ வீரர்கள் மூலம் உருவாகவில்லை. ரிஷிகளாலும், முனிவர்களாலும், சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவாக்கப்பட்டது என பேசினார். இந்த பேச்சும் சர்ச்சையை கிளப்பியது. நம் மன்னர்களின் ஆட்சி முறை, வரலாறு மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரியம் அறியாமல் பேசுவதா? வரலாறு எது, புராணம் எது என்பதை கூட புரிந்து கொள்ளாமல் ஆளுநர் பேசுவதாக கண்டனங்கள் எழுந்தன.

சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா, ஆன்லைன் ரம்மி தடை மசோதா உள்ளிட்ட பல மசோதாக்களை கிடப்பில் போட்டது உள்ளிட்ட அவரது செயல்பாடுகள், தமிழ்நாட்டு மக்களுக்கு எரிச்சலையே தந்து வருகின்றன. ஒன்றிய அரசின் அறிவிக்கப்படாத மேடை பேச்சாளராகவும், மாநில அரசுக்கு எதிரானவராகவும் செயல்படுவதாக மக்கள் கூறி வருகின்றனர். அரசை விமர்சிக்கும் ஆளுநரின் சமீபத்திய சர்ச்சை பேச்சுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினும் பதிலடி கொடுக்க தவறுவதில்லை. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு விழாவில் பேசிய முதல்வர், கல்வியில், மக்கள் நலம் காப்பதில் மிகச்சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது.

நம் மாநிலத்தின் வளர்ச்சி, மாநிலத்திலேயே மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு மட்டும் புலப்படவில்லை. இந்திய அளவில் பல்வேறு சுகாதார குறியீடுகளில் முதல் 3 மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு உள்ளது. மாநில அரசின் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொடர் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை உலக சுகாதார அமைப்பே பாராட்டியுள்ளது என பேசியுள்ளார். ஒரு ஆளுநர் என்பவர் மாநிலம், நாட்டின் எதிர்காலம், வளர்ச்சி குறித்தே பேச வேண்டும். மதம், இனம் சார்ந்த விழாக்களில் பங்கேற்று தேவையற்ற கருத்துக்களை பேசக்கூடாது. ஆளுநருக்கென உள்ள முக்கிய விழாக்கள் நீங்கலாக பிற விழாக்களில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். தான் ஆளுநராக உள்ள மாநிலத்தின் அரசை விமர்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

அனைவரையும் சமமென கருத வேண்டும். ஒரு சார்பு மனநிலை கொண்டவராக இருக்கக்கூடாது. அர்த்தமற்ற பேச்சுகளை இனியாவது தவிர்த்து, மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து, மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பதே ஆளுநரின் பணி என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இனியாவது ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது பதவிக்கான நிலையில் நின்று செயல்பட வேண்டும். சர்ச்சைக்குரிய பேச்சுகள், மாநில அரசுக்கு எதிரான பேச்சுகளை இனியாவது தவிர்க்க வேண்டு மென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

The post தொடரும் அத்துமீறல் appeared first on Dinakaran.

Related Stories: