2ம் கட்ட சென்னை மெட்ரோ மாதவரம் பால் பண்ணை முதல் வேணுகோபால் நகர் வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு

சென்னை: இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ திட்டத்தில், மாதவரம் பால்பண்ணையில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி 415 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்து நேற்று வேணுகோபால் நகரை வந்தடைந்தது என்று மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவையை சென்னையில் துவங்கியது. சென்னை மெட்ரோ ரயில்வழித்தடம் 3ல் 45.4 கி.மீ மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை, 19 உயர்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள், 28 சுரங்கப்பாதை ரயில் மெட்ரோ ரயில் நிலையங்கள், மேலும் வழித்தடம் 4 ல் 26.1 கி.மீ கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையம் முதல் பூந்தமல்லி பணிமனை வரை, 18 உயர்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள், 9 சுரங்கப்பாதை ரயில் மெட்ரோ ரயில் நிலையங்கள், வழித்தடம் 5ல் 44.6 கி.மீமாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 39 உயர்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள், 6 சுரங்கப்பாதை ரயில் மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆகும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-2ல் மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பல்வேறு ஒப்பந்ததாரர்கள் மூலம் வழித்தடம் 3, 4 மற்றும் 5ல் சுரங்கப்பாதை பிரிவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழித்தடம் 3ல் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஆனைமலை ஆஸ்திரேலிய நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு, சீனாவிலிருந்து டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் சென்னை துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டது.

இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் வழித்தடம் 3ல் மாதவரம் பால்பண்ணையில் கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி 415 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்து நேற்று வேணுகோபால் நகரை வந்தடைந்தது. இதேபோல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் சேர்வராயன் வழித்தடம் 3ல் மாதவரம் பால்பண்ணையில் மே 5ம் தேதியன்று சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி 50 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு வேணுகோபால் நகரை வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக், திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் லிவிங்ஸ்டோன், ரேகா பிரகாஷ், கூடுதல் பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, டாடா ப்ரொஜெக்ட்ஸ் நிறுவனத்தின் மேலாளர் ரமேஷ், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உள்ளனர்.

The post 2ம் கட்ட சென்னை மெட்ரோ மாதவரம் பால் பண்ணை முதல் வேணுகோபால் நகர் வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: