கோயில்களின் அறங்காவலர் நியமனத்தில் பக்தர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ‘‘ கோயில்களின் அறங்காவலர் நியமனத்தில் வெளிப்படை தன்மை கடைபிடிக்கப்பட்டு அனைத்து பக்தர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்’’ என்று சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. கோயில்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு, கோயில்கள் பாதுகாப்பு, பராமரிப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் கடந்த 2015ல் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்து 121 கோவில்கள் உள்ளன. இதில் 8,450 கோயில்கள் நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. இவை புராதன கோயில்களாக கருதப்படுகின்றன. 44 ஆயிரம் கோயில்களில் 32 ஆயிரத்து 935 கோயில்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும், 6,414 கோயில்கள் சிறிய சீரமைப்புப் பணிகள் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும், 530 கோயில்கள் பாதி சிதிலமடைந்துள்ளதாகவும், 716 கோயில்கள் முழுமையாக சிதிலமடைந்துள்ளதாகவும் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாதி சிதிலமடைந்த, முழுமையாக சிதிலமடைந்த இந்த கோயில்களை யுனெஸ்கோ விதிகளின்படி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு: மாநில அளவிலான புராதன ஆணையத்தில் ஏற்கனவே 16 பேர் உள்ள நிலையில், அறநிலையத் துறையை சேர்ந்த ஒருவரை சேர்ப்பதில் தவறில்லை. இதுசம்பந்தமாக சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பாதுகாக்க சட்டம் இயற்றுவதில் தீர்க்கமாக இருப்பதாக கூறிவரும் தமிழ்நாடு அரசு நீதிமன்ற உத்தரவுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. தமிழ்நாடு புராதன ஆணைய சட்டத்தில் கோயில்களும் அடங்கும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலங்களான கோயில்களையும் மாநில அளவிலான புராதன ஆணையத்தில் சேர்க்க வேண்டும். அதேபோல கோயில்களின் வருமானம், செலவு ஆகியவை மத்திய கணக்கு தணிக்கை துறையால் தணிக்கை செய்யப்படுவதன் மூலம் மாநில அரசின் உரிமை பறிக்கப்படாது.

தற்போது இருக்கக்கூடிய முறையுடன் மத்திய கணக்கு தணிக்கை துறையும் தணிக்கை செய்யலாம். கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை ஒதுக்கீடு செய்வதாக இருந்தால் அதன்மூலம் கோயிலுக்கு பலன் இருக்க வேண்டும். அறநிலையத்துறை சட்டத்தின்படியே இந்த ஒதுக்கீடு இருக்க வேண்டும். கோயில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும். கோயிலின் அன்றாட நிர்வாகத்தில் அறங்காவலர்கள் முக்கிய பங்கு வகிப்பதால், அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் மட்டுமே அறங்காவலர்களை நியமிக்க கூடாது.

அறங்காவலராக நியமிக்கப்படுபவர் ஆன்மீகவாதியாகவும், பக்தராகவும் இருக்க வேண்டும். அரசியல்வாதிகளை நியமிப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து பக்தர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். தேர்வு செயல்முறை வெளிப்படையாக இருக்க வேண்டும். நியமிக்கப்படும் நபர் இந்து அறநிலைய துறை சட்டம் மற்றும் நீதித்துறை தீர்ப்புகளின்படி அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பணிகள் பக்தர்களின் பங்களிப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

The post கோயில்களின் அறங்காவலர் நியமனத்தில் பக்தர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: