நாடாளுமன்ற தேர்தல் குறித்து சென்னையில் அமித்ஷா முக்கிய ஆலோசனை: வேலூர் பொதுக்கூட்டத்தில் 11ம் தேதி பேசுகிறார்; பள்ளிக்கரணையில் கட்சியினருடன் ஆலோசனை

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துவதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 11ம்தேதி காலை சென்னை வருகிறார். மேலும், பள்ளிக்கரணையில் தென்ெசன்னை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர், மாலையில் நடக்கும் பாஜ பொதுகூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக வேலூர் செல்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஒன்றிய அரசின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்த பாஜ திட்டமிட்டுள்ளது.

அதன்படி, வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தநேரியில் பாஜ பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, வி.கே.சிங் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அமித்ஷாவின் தமிழக பயண தேதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது வரும் 8ம் தேதிக்கு பதிலாக 11ம் தேதி வேலூருக்கு அமித்ஷா வருகிறார். ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்ட இடத்தை டெல்லியில் இருந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கனவே ஆய்வு செய்து விட்டனர்.

மேலும், தமிழ்நாடு பாஜ தலைவர்களும் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அமித்ஷா வரும் 11ம்தேதி காலை டெல்லியில் இருந்து சென்னை வரும் அமித்ஷா, விமான நிலையத்தில் இருந்து பள்ளிக்கரணை வருகிறார். இங்கு தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பாஜ தனித்து போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் பெற்றுள்ளது. எனவே, இந்த தொகுதியை கைப்பற்றும் வகையில் தேர்தல் பணிகளை முன்னெடுக்க அமித்ஷா வியூகம் அமைத்து கொடுக்க முடிவு செய்துள்ளார். இதற்காக தென்சென்னை தொகுதி பாஜ நிர்வாகிகளுடன் அன்றைய தினம் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் சென்னை விமான நிலையம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் புறப்பட்டு செல்கிறார். வேலூரில் நடைபெறும் பாஜ பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த இரு நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு டெல்லி புறப்பட்டு செல்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு ஆண்டு கூட இல்லாத நிலையில், அமித்ஷாவின் தமிழக பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜ மூத்த தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தல் குறித்து சென்னையில் அமித்ஷா முக்கிய ஆலோசனை: வேலூர் பொதுக்கூட்டத்தில் 11ம் தேதி பேசுகிறார்; பள்ளிக்கரணையில் கட்சியினருடன் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: