அந்தியூர்: அந்தியூர் அருகே பவானி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி பலியான 2 பேர் சடலத்தை போலீசார் மீட்டனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள புது மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (45). அவரது மைத்துனர் மோகன்ராஜ் (46). இருவரும் செங்கல் சூளை தொழிலாளிகள். இவர்களுடன் இவர்களது நண்பர் ரவி உள்பட 3 பேரும் நேற்று மாலை அத்தாணி கருவல்வாடிபுதூர் பகுதியில் ஓடும் பவானி ஆற்றில் குளிக்க சென்றனர். ரவிக்கு நீச்சல் தெரியாததால் கரையில் நின்றுகொண்டார். சின்னதுரையும், மோகன்ராஜூம் ஆற்றில் இறங்கி குளித்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஆழம் நிறைந்த பகுதிக்கு சென்றதால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்து கரையில் நின்று கொண்டிருந்த ரவி சத்தம் போட்டுள்ளார். அதற்குள் தண்ணீருக்குள் இருவரும் மூழ்கிவிட்டனர். இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தேடுதல் நடத்தி சின்னதுரை உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பவானி ஆற்றில் மூழ்கிய மோகன்ராஜை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இரவு நேரமானதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டு இன்று காலை மீண்டும் தேடும்பணி நடக்கும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை மோகன்ராஜ் உடல் அதே பகுதியில் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மோகன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதிமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post பவானி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி பலியான 2 பேர் சடலம் மீட்பு: அந்தியூர் அருகே சோகம் appeared first on Dinakaran.