போடி பகுதியில் கலர் சாயம் பூச்சு? ஏலக்காய் குடோனுக்கு அதிகாரிகள் ‘சீல்’

*மாங்காய் வியாபாரிகளுக்கும் அபராதம் விதிப்பு

போடி : போடியில் ஏலக்காய், மாம்பழம் உள்ளிட்ட உணவுப்பொருட்களில் கலப்படம் மற்றும் கலருக்காக சாயம் பூசப்படுகிறது என மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட அதிகாரி ராகவன் தலைமையில் போடி உணவு பாதுகாப்பு உதவி அதிகாரி சரண்யா ஆகியோர் போடி பகுதியில் உள்ள குரங்கணி சாலை மற்றும் டி.வி.கே.கே நகர் உழவர் சந்தை பகுதிகளில் உள்ள ஏலக்காய் மற்றும் மாங்காய் குடோன்கள், கடைகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தாய்வின் போது ஒரு குடோனில் ஏலக்காயில் கலர் சாயம் இருப்பதாக சந்ேதகம் எழுந்தது. அந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்து, ஆய்வு இறுதி முடிவு வரும் வரை விற்பனை செய்யகூடாது என எச்சரித்தனர். அதேபோல் 50க்கும் மேற்பட்ட மாங்காய் குடோன்களில் ஆய்வு செய்தனர். அப்போது 2 கடைகளில் ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைத்திருந்தது தெரியவந்தது. இதில் தலா 350 கிலோ வீதம் இருந்த மாங்காய்களை பறிமுதல் செய்து வியாபாரி 2 பேருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர். மேலும் அந்த 2 குடோன்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

பார்மலின் தடவி விற்பனை தேனி மாவட்டத்தை பொறுத்தவரை திருச்செந்தூர், கன்னியாகுமரி பகுதிகளிலிருந்தும் மதுரை மீன் மாக்கெட்டிலிருந்தும், கேரளப்பகுதியிலிருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மீன் ஐந்து டிகிரி செல்சியஸின் சரியான வெப்பநிலையில் பராமரிக்கப்படாவிட்டால், அது விரைவில் கெட்டுப்போகிறது. இதைத் தவிர்க்கவும், நீண்ட நாட்களுக்குக்கு கெடாமல் இருக்கவும் அதில் ஃபார்மலினைத் தடவி விற்பனை செய்கின்றனர்.

ஃபார்மால்டிஹைடில் இருந்து பெறப்படும் பார்மலின் பிணவறையில் பிரேதங்களை கெட்டுப் போகாமல் வைக்க பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருள் ஆகும். இதனால் புதிதாகப் பிடித்த மீன்களைப் போலவே இருக்கும் இந்த மீன்களைச் சாப்பிட்டால், வயிற்றுவலி, வயிற்றுப்புண் என பல பாதிப்புகள் உண்டாகலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.இந்த ஃபார்மலின் தடவிய மீன்கள் கம்பம், கூடலூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது.

பார்மலின் தடவிய மீன்களை பார்த்த உடன் கண்டுபிடிக்க முடியாது. ஆய்வின் மூலமே கண்டுபிடிக்க முடியும். பார்மலின் தடவிய மீன்கள் மீது ஈக்கள் உட்காராது. இதனால், மீனின் கண்கள் நன்றாக உள்ளனவா, செவில் சிவப்பாக உள்ளதா, உடல் உறுதித்தன்மையுடன் இருக்கிறதா என்று பார்த்து, மீன்களின் மீது ஈக்கள் உட்காருகிறதா என்பதையும் பார்த்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தேயிலை இலைகளில் நன்கு காயவைத்து உரிய பக்குவத்துடன் தேயிலை தூள் விற்பனைக்கு வருகிறது. இதிலும் கலப்படங்களை சேர்ப்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பப்பாளி இலைக்கொட்டைகள் இதில் கலக்கப்படுகிறது. சிக்கன் சமைக்க பூசப்படும் கலர்பொடிகளில் மனித உறுப்புகளில் உள்ள குடலை பாதிக்கும் ரசாயனம் கலக்கப்படுகிறது.
மேலும் குழந்தைகளுக்காக கடைகளில் விற்கப்படும் கேக் முதல் சாக்லெட்டுகளில் கலப்படம் அதிகளவில் விற்பனை நடக்கிறது.

எனவே, கடைகள் மற்றும், பாஸ்புட் கடைகள், இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அடிக்கடி சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கலப்பட பொருட்கள் விற்பனை அதிகமாக நடப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதற்கு கடிவாளமிட உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வுகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post போடி பகுதியில் கலர் சாயம் பூச்சு? ஏலக்காய் குடோனுக்கு அதிகாரிகள் ‘சீல்’ appeared first on Dinakaran.

Related Stories: