ஈரோடு: தமிழக கவர்னரின் செயல்பாடுகள் அண்ணாமலையை விட மோசமாக உள்ளது என ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி; கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறோம். இந்த நேரத்தில் மாநில அளவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்திருப்பது சிறப்பானது.
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். என்னை பொறுத்தவரை அதற்கு பொறுப்பேற்று பிரதமரே ராஜினாமா செய்ய வேண்டும். மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் கூறியதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகுந்த பதிலை தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரசை பொறுத்தவரை கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் அதை முழுமையாக எதிர்ப்போம்.
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து பேச கவர்னருக்கு அருகதை கிடையாது. அவர் சமீபகாலமாக மூன்றாம் தர பேச்சாளியாக மாறியுள்ளார். தமிழக அரசையும், முதலமைச்சரையும் எதிர்க்க வேண்டும் என்றே செயல்பட்டு வருகிறார். அவரது செயல்பாடுகள் அண்ணாமலையைவிட மோசமாக உள்ளன. கவர்னரை விரைவில் தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழக கவர்னரின் செயல்பாடு அண்ணாமலையைவிட மோசம்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.