*ரயில்வே துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?
*எதிர்பார்ப்பில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்
தேனி : தேனி நகரின் மத்தியில் உள்ள ரயில்வே நிலைய சரக்கு முனையம் பின்புறம் செயற்கையாக நீர்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நீர்நிலைகளில் மூடாமல் ரயில்வே நிர்வாகம் அலட்சியத்தோடு நடந்து வருகிறது. இதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாவட்டமாகும். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையான போடிமெட்டு, குரங்கனி, மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் விளையும் நறுமணப் பொருள்களை வணிகத்திற்குகொண்டு செல்வதற்காக போடியில் இருந்து மதுரைக்கு மீட்டர் கேஜ் ரயில் இயக்கப்பட்டது. மீட்டர் கேஜ் ரயில் இயக்கப்பட்டபோது தேனி ரயில் நிலையம் அருகே சரக்கு முனையமும் செயல்பட்டு வந்தது. இந்த சரக்கு முனையத்திற்கு செல்லும் சாலை குட்செட் தெரு என இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறது.
2010ம் ஆண்டு நாடு முழுவதும் மீட்டர் கேஜ் ரயில்சேவைகள் நிறுத்தப்பட்டு அகலபாதை ரயில் சேவையாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. இதன்படி, போடியில் இருந்து மதுரை வரை இயக்கப்பட்டு வந்த போடி மதுரை மீட்டர் கேஜ் ரயி்ல் சேவை கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, போடியில் இருந்து மதுரைவரை அகலரயில்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. ரூ.592 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மீட்டர் கேஜ் ரயில் தண்டவாளங்கள் அகற்றப்பட்டு, இதற்கு பதிலாக அகலபாத ரயில் தண்டாவாளங்கள், ரயில் செல்லும் பாதையில் ஆங்காங்கே மேம்பாலங்கள், குறுகிய பாலங்கள் அமைக்கும் பணி மற்றும் போடியில் இருந்து தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சொக்கானூரணி, பல்கலைநகர் வழியாக மதுரை செல்வது வரை ரயில்நிலைய சந்திப்புகள் அமைக்கும் பணி நடந்தது. இதனையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு மே 26 ம்தேதி முதல் மதுரையில் இருந்து பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்டு வரும் ரயில் சேவையை விரைவில் போடி வரை நீட்டிப்பதோடு, போடியில் இருந்து சென்னைக்கு ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.இதனையடுத்து, தென்னக ரயில்வே சென்னையில் இருந்து போடிக்கும், போடியில் இருந்து சென்னைக்கும் வாரம் 3 நாட்கள் பயணிகள் ரயில்சேவையை தொடங்குவதென அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி வருகிற 15 ம்தேதி சென்னையில் இருந்து போடிக்கும், இதனைத்தொடர்ந்து போடியில் இருந்து சென்னைக்கும் பயணிகள் ரயில் சேவை தொடங்க உள்ளது.
இதற்கிடையில் தேனி ரயில் வே நிலையம் அருகே சரக்கு முனையமும் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு நேரம் மட்டுமே மதுரைக்கு செல்லும் வகையில் ரயில் இயக்கப்படுகிறது. வருகிற 15ம் தேதிக்கு பிறகு சென்னைக்கு ரயில் இயக்கப்படும்போது நாளொன்றுக்கு இருமுறை ரயில் சேவை இருக்கும். இதனால் ரயில்நிலையத்திற்கு வரும் பயணிகள், உறவினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கும்.
இந்நிலையில் ரயில்நிலையம் அருகே அமைந்துள்ள சரக்கு முனையத்தை ஒட்டி இதன்பின்புறம் சுமார் அரை கிலோ மீட்டர் நீளம் மற்றும் சுமார் 10 மீட்டர் அகலத்தில் 3 நீர்நிலைகள் பாசிபடர்ந்து தண்ணீர் நிரம்பி உள்ளது. சுமார் 5 முதல் 10 அடி ஆழமுள்ள இம்மூன்று நீர்நிலைகளும், போடி மதுரை ரயில் பாதைக்காக ஒப்பந்ததாரர் இப்பகுதியில் இருந்த மண்ணை வெட்டி எடுத்துச் சென்றதால் ஏற்பட்ட பள்ளங்களாகும்.
கடந்த கால அதிமுக ஆட்சியின்போது, கனிம வளத்துறை அதிகாரிகள் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் மண் எடுக்க அனுமதித்ததால் இப்பகுதியில் மிகப்பெரிய நீருற்றுகள் உருவாகி விட்டன. இதில் பள்ளங்களில் இருந்து பெருகும் ஊற்றுகளாலும், மழைகாலங்களில் பெய்யும் மழைநீர் தேங்குவதாலும் இம்மூன்று நீர்நிலைகளிலும் பாசம் படிந்து தண்ணீர் நிரம்பியே உள்ளது.
இப்பள்ளங்களில் தேங்கியுள்ள நீரில் கடந்த 3 மாதங்களில் ஒரு கால்நடை, ஒரு முதியவர், 2 சிறுவர்கள் உள்ளிட்டோர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். கனிம வளத்துறை ஆதரவுடன் ரயில்வே பணிகளுக்காக ஒப்பந்ததாரர் செய்த முறைகேட்டால் தற்போது உயிர்பலி அதிகரித்து வருகிறது. இந்த நீர்நிலைகளுக்கு செல்லும் பாதையானது எவ்வித பாதுகாப்போ, எச்சரிக்கையோ இல்லாமல் உள்ளது.
பெயரளவில் சரக்கு முனயைம் அருகே தற்காலிக கூடாரத்தில் இந்த இடம் ரயில்வே நிலையத்திற்கு சொந்தமானது. இங்குள்ள நீர்நிலைகளில் யாரும் குளிக்கக் கூடாது என அறிவிப்பு பலகை மட்டும் ரயில்வே நிர்வாகம் வைத்துள்ளது. ஆனால், இதனைக் கண்காணிக்கவோ, அல்லது எச்சரித்து அனுப்பவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்பகுதியில் விவசாயிகள் பலர் கால்நடைகளை வளர்த்து வரும் நிலையில் ஆபத்தான உயிர்பலி வாங்கும் இந்தநீர்நிலைகளில் இறங்கி பலியாகும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் இவ்விடத்தை நேரில் பார்வையிட்டு, இதனை மூடவோ அல்லது இப்பகுதிக்குள் பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர், சிறுவர்கள் யாரும் ெசல்ல முடியாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்புறம்பாக உருவாக்கப்பட்ட இந்த நீர்நிலைகளை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
The post தேனி ரயில்வே நிலையம் அருகே செயற்கை நீர்நிலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படுமா? appeared first on Dinakaran.