கோடை சீசனில் 7 லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி

ஊட்டி : ஊட்டி படகு இல்லத்தில் கோடை சீசனில் 7 லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் சுற்றுலா மாவட்டமான நீலகிரிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் கூட்டம் அலைமோதும். நடப்பு ஆண்டு கோடை சீசனில் மட்டும் 8.50 லட்சம் பேர் வந்து சென்றனர். இந்நிலையில் கோடை சீசன் நிறைவடைந்த நிலையிலும் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு வரும் 12க்கு தள்ளிப்போன நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை குறையவில்லை. இதனால் தினசரி சுமார் 25 ஆயிரம் பேர் ஊட்டிக்கு வருகின்றனர். வார விடுமுறை தினங்களில் கூட்டம் இன்னும் அதிகரிக்கிறது.

இதன் காரணமாக அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம், சூட்டிங் மட்டம், ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து மகிழ்கின்றனர். குன்னூர் சிம்ஸ் பூங்கா, பைன்பாரஸ்ட், காட்டேரி பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படுகிறது.

ஊட்டி வரக்கூடிய சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தில் இருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய தவறுவதில்லை. சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய வசதியாக மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள், மிதி படகுகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தி உற்சாகமாக படகு சவாரி செய்தனர்.ஏரி கரையோரம் மரங்களில் அமர்ந்திருந்து ஓய்வு எடுக்கும் புள்ளி மூக்கு வாத்துகளையும் கண்டு ரசிக்கின்றனர்.

இதேபோல் ஏரியின் மறு கரையில் உள்ள தேனிலவு படகு இல்லத்தில் இருந்தும் படகு சவாரி ெசய்கின்றனர். இதனிடையே கடந்த ஆண்டு கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் படகு இல்லத்தில் சுமார் 5.50 லட்சம் பேர் படகு சவாரி செய்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 7 லட்சம் பேர் படகு சவாரி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கோடை சீசனில் 7 லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி appeared first on Dinakaran.

Related Stories: