இந்திய உணவு கழகத்தில் அதிகாரி பதவி வாங்கித் தருவதாக வாலிபரிடம் ₹16 லட்சம் மோசடி

புதுச்சேரி, ஜூன் 7: புதுச்சேரி, காமராஜ் நகர், புதுத் தெருவை சேர்ந்தவர் காத்தவராயன் (34). ஏம்பலம் நத்தமேடு பகுதியை பூர்வீகமாக கொண்ட இவர், அரசு வேலை தேடி அலைந்துள்ளார். இதுபற்றி ெவளியூர்களில் உள்ள தனது உறவினர்கள், நண்பர்களிடம் கூறியிருந்தார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் சென்னையைச் சேர்ந்த அறிவழகன் (41), அவரது மனைவி லாவண்யா (37) ஆகியோர் காத்தவராயனிடம் நண்பர்கள் மூலம் அறிமுகமானதாக கூறப்படுகிறது. அப்போது தமிழகத்தில் உயர்மட்ட அளவில் தங்களுக்கு செல்வாக்கு இருப்பதாக கூறிக் கொண்ட அறிவழகன், இந்திய உணவுக் கழகத்தின் சென்னை கிளையின் அரசு சாரா தனி இயக்குநர் பதவி வாங்கி தருவதாக ஆசைவார்த்தைகளை கூறியுள்ளார். இதை நம்பிய காத்தவராயன், ஆன்லைன் மூலமாக அறிவழகன் மற்றும் லாவண்யாவின் வங்கிக் கணக்கில் 7 தவணையாக மொத்தம் ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்தை அனுப்பி வைத்தாராம். 2022 அக்டோபர் 8 முதல் 20ம்தேதி வரையிலான காலத்தில் இப்பணத்தை அவர் அனுப்பி வைத்தார். பல மாதங்கள் கடந்தும் காத்தவராயனுக்கு தம்பதி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என தெரிகிறது. மாறாக பணத்தை காத்தவராயன் திருப்பித் தருமாறு கேட்டபோது, அதனை கொடுக்காமல் ஏமாற்றியதோடு தலைமறைவானார்களாம். இதையடுத்து தான், மோசடி போனதை உணர்ந்த காத்தவராயன், இது குறித்து கோரிமேடு காவல் நிலையத்தில் முறையிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார் அறிவழகன், லாவண்யா ஆகியோர் மீது மோசடி பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post இந்திய உணவு கழகத்தில் அதிகாரி பதவி வாங்கித் தருவதாக வாலிபரிடம் ₹16 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: