பதில் எங்கே?

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சோகம் ஒடிசா பாலாசோரில் 288 பேரை பலி கொண்ட 3 ரயில்கள் மோதிக்கொண்ட கொடூர விபத்து. அப்படித்தான் அத்தனை அரசியல் தலைவர்களும் சொல்கிறார்கள். லூப்லைனில் நின்று கொண்டு இருந்த சரக்கு ரயில் மீது சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதும், அதை தொடர்ந்து பெங்களூரு-ஹவுரா விரைவு ரயில் மோதியதும் கற்பனைக்கும் எட்டாத கொடூரங்கள். எப்படி நடந்தது இந்த விபத்து, நவீன தொழில்நுட்பம் நிறைந்து, வளர்ந்து இருக்கும் இந்த காலக்கட்டத்தில் இப்படி ஒரு கொடூர விபத்து நடந்தது எப்படி? அதுதான் இன்று அனைவர் மனதிலும் இருக்கும் கேள்வி. 2017ம் ஆண்டு முதல் பொதுபட்ஜெட்டில் ரயில்வே பட்ஜெட்டை இணைத்தது பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முதல் தவறு.

அதன்பிறகு தான் ரயில்வே திட்டங்கள், பராமரிப்பு பணிகள், பயணிகள் பாதுகாப்பில் அலட்சியம் ஆகியவை தொடர்ந்து அதிகரித்து இருக்கிறது. சிஏஜி அறிக்கைகள் கூட அதைத்தான் சுட்டிக்காட்டி உள்ளன. ரயில் தண்டவாள கட்டமைப்பு மறு ஆய்வு செய்வதில் குளறுபடி, 2017 முதல் 2021 வரை பொறியியல் குறைபாடு காரணமாக 422 ரயில்கள் தடம் புரண்டு விபத்து, தண்டவாளத்தை முறையாக பராமரிக்காததால் 171 முறை ரயில்கள் தடம் புரண்டு விபத்து, மெக்கானிக்கல் துறை குறைபாடு காரணமாக 182 முறையும், இன்ஜின் டிரைவர்களின் தவறால் 154 முறையும், ஆப்ரேட்டிங் துறையின் தவறால் 275 முறையும் ரயில்கள் விபத்தில் சிக்கி உள்ளன. 2017க்கு முன்பு இருந்ததைப்போல் ரயில்வே தன்னாட்சி கொண்ட துறையாக இல்லாத காரணத்தால் இவை அனைத்தும் முறையாக விசாரிக்கப்படவில்லை. இந்த குறைகள் போக்கப்படவும் இல்லை.

இவை எல்லாவற்றையும் விட மேலாக ஒடிசாவில் உயிரை குடித்த ரயில் விபத்து போல் இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 8ம் தேதி மைசூர் ரயில் மண்டலத்தில் சரக்கு ரயில் நிறுத்தியிருந்த லூப் லைனில் சம்பர்க் கிராந்தி ரயில் செல்ல சிக்னல் வழங்கப்பட்டதும், இதை பார்த்து அதிர்ந்த சம்பர்க் கிராந்தி ரயில் இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தி புகார் செய்ததும், அதை தொடர்ந்து மேலிட விசாரணைக்கு உத்தரவிட்டு, சிக்னல் இயங்கும் முறை தொடர்பாக ஆய்வுக்கு உத்தரவிட கோரி கடிதம் எழுதிய பிறகும், நாடு முழுவதும் அதை பின்பற்றாததால் இப்படி ஒரு கொடூர விபத்து ஏற்பட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இப்போது சிபிஐ விசாரிக்கும் என்று அறிவித்து இருக்கிறார்கள். ஏற்கனவே 2016ம் ஆண்டு கான்பூரில் நடந்த ரயில் விபத்தில் 150 பேர் பலியானதில் சதி நடந்ததாக கூறி பிரதமர் மோடி என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டார். அது விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மறுத்து விட்டது. அந்த விபத்து எப்படி நடந்தது என்று இன்றுவரை யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. அதே போல் தான் ஒடிசா விபத்தை மூடிமறைக்கும் செயலாக சிபிஐ வசம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. சிபிஐ குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு. ரயில்வே விபத்துகளை விசாரிக்கும் அமைப்பு இல்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சாடியிருக்கிறார். பிரதமர் மோடிக்கு அவர் 11 கேள்விகளை கேட்டு இருக்கிறார். நாட்டின் முக்கியமான பிரச்னை பற்றி பிரதமர் மோடி இந்த 9 ஆண்டுகளில் பேசியதே இல்லை. 288 பேர் பலியான ஒடிசா ரயில் விபத்து குறித்து மட்டும் பதில் சொல்லிவிடுவாரா என்ன?

The post பதில் எங்கே? appeared first on Dinakaran.

Related Stories: