புதுவையில் தலைமை செயலாளர் தேம்பி அழுத கதையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

 

‘‘திருச்சி அருகே நடந்த கூட்டத்தை விட தூங்கா நகரில் நடக்கும் கூட்டத்தை பார்த்து யார் அதிர வேண்டும் என சேலம்காரர் நினைக்கிறார்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தேனிக்காரரின் மலைக்கோட்டை நகர மாநாட்டை விட பலமடங்கு கூட்டம், தூங்கா நகரத்தில் நடக்கும் மாநாட்டிற்கு வந்தாக வேண்டும் என்று முக்கிய நிர்வாகிகளுக்கு சேலத்தில் இருந்து உத்தரவு பறந்துள்ளதாம். அதாவது, தென்மாவட்டங்களில் எனக்கும் செல்வாக்கு என்பதை நிரூபிக்க உதவும் என்று நினைக்கிறாராம். இதனால் தூங்கா நகர புறநகர் மாஜி அமைச்சர், தென் மாவட்டங்களில் உள்ள மாவட்ட, ஒன்றிய செயலாளர்களிடம் ஆட்களை கூடுதலாக அழைத்து வர வேண்டும். கூட்டத்துக்கு வருபவர்களுக்கு கறிவிருந்துடன் ரூ.500 முதல் ரூ.800, கூடுதலாக சரக்கு உண்டு என கூவி அழைக்கிறார்களாம்.

இதனால் கடற்கரையோர மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் நிர்வாகிகள், தொண்டர்கள் போக பொதுமக்களை ஏலமிட்டு கூவிக்கூவி அழைப்பதில், மாஜி மந்திரியின் ஆட்கள் பிஸியா இருக்காங்க. சில இடங்களில் வாகனத்துக்கான அட்வான்ஸ் கொடுத்து இருக்காங்களம். ஏற்கனவே இலைக்கட்சி பல அணிகளாக பிரிந்து கிடக்கும் சூழலில், ஆட்களை அழைத்துவர பெரும் திணறலாக இருக்கிறதாம். தனக்கு ஒதுக்கிய மாவட்டத்தில் ஆட்களை பிடிக்கும் பணி மந்தமாக இருப்பதால் தூங்கா நகர மாஜி மந்திரி டென்ஷனில் இருக்கிறாராம். பேசிய தொகைக்கு கூடுதலாக தர ஒப்புக் கொண்டு ஆட்களை சேர்க்கும் பணியில் மாஜி மந்திரி படை தீவிரம் காட்டி வருவதாக இலைக்கட்சியினர் மத்தியில் பேச்சு ஓடுது…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிறை துறை நிர்வாகம் சிக்கலாக இருக்காமே, ஏனாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் சிறைச்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள 10 மத்திய சிறைகளில், 6 சிறைகளில் கண்காணிப்பாளர் பணியிடம் காலியாகவே இருக்காம். அதிலும் 10 கூடுதல் கண்காணிப்பாளர் பதவி ரொம்ப நாளாவே நிரப்பவே இல்லையாம். இதனால சிறையை நிர்வாகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்காம். கீழ்மட்ட அதிகாரிகளை வச்சி தான் இப்போது சிறைசாலைகளில் உள்ள கைதிகளை சமாளிக்கிறாங்களாம். இதற்கிடையில் மாங்கனி மத்திய ஜெயில்ல, கண்காணிப்பாளராக பொறுப்பு அதிகாரி ஒருவரை நியமித்துள்ளார்களாம். அவர் மேல முப்பது மெமோவுக்கு மேல இருக்காம்.

வேலையில் கவனமின்மை, அலட்சியம் போன்றவை காரணமாக, அதிகாரிகள் கொடுத்த பரிசாம் அவை. இவருக்கு தற்போது பொறுப்பு வழங்கியுள்ளதால் கைதிகளும், வார்டன்களும் ரொம்பவே ஹேப்பியா இருக்காங்க. எனவே உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நேர்மையான வார்டன்கள் டீ குடிக்கும்போதெல்லாம் பேசிக்கிறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ தலைமை செயலாளரை கண்ணீர் விட வைத்த எம்எல்ஏ யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தொய்வை கண்டித்துள்ளாராம் ஆளுங்கட்சிக்கு ஆதரவான சுயேச்சை ஒருத்தர். அவரு தலைமை செயலரை கண்டித்து தலைமை செயலகம் முன்பு போராட்டமும் நடத்தி அசத்தினாராம்.

இதனையறிந்த தலைமை செயலர், பின் பக்க வாயில் வழியாக கம்பன் கழகத்தில் நடந்த அரசு விழாவுக்கு எஸ்கேப் ஆயிட்டாராம். இதனை மோப்பம் பிடித்த எம்எல்ஏ, கேட் ஏறி குதித்து புல்லட்சாமி முன்னிலையில் விழா மேடையிலேயே சரமாரியாக வசை பாடிவிட்டாராம். இதனால் மன உளைச்சல் அடைந்த தலைமை செயலர், அன்றிரவே புதுவை போலீஸ் உயரதிகாரிக்கு போன் செய்து கதறி அழுதாராம். அதுமட்டுமில்லாமல் சுயேச்சை எம்எல்ஏவான அவர் மீது வழக்கு போட வேண்டும் என்றாராம். நள்ளிரவே எம்எல்ஏ மீது வழக்கு பதிந்து விட்டு சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரையும் சஸ்பெண்ட் செய்துவிட்டாங்க. இது தற்போது புதுவை அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

சட்டசபையின் நாயகர் தலைமையில் உறுதிமொழிக் கூட்டத்தில் நேரு எம்எல்ஏ பரபரப்பு புகார் கூறியுள்ளார். உடனே எம்எல்ஏ மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என காக்கி அதிகாரிக்கு சபையின் நாயகர் உத்தரவிட்டார். தலைமை செயலர் பக்கா தாமரை பார்ட்டியாம். தாமரை கட்சியை சேர்ந்த அமைச்சர், புல்லட்சாமி, பவர்புல் பெண்மணி உள்பட பலர் தலைமை செயலருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியும் அவரை மாற்றவில்லையாம். இதனால் அவரை மாற்றுவதற்கு அரசியல் ரீதியான போராட்டம் இதுதான் ஆரம்பமாம். இனி வரும் காலங்களில் தலைமை செயலருக்கு எதிராக பல போராட்டங்கள் புதுவையில் வெடிக்குமாம்…’’ என்று கூறினார் விக்கியானந்தா.

‘‘பல லகரங்களை சுருட்டிவிட்டு எஸ்கேப் ஆன நபரை பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவையில் டாஸ்மாக் ‘பார்’ உரிமையாளர்களிடம் ஒரு கும்பல் டெபாசிட் பணம் பெற்று, இதை நாங்களே டாஸ்மாக் ஆபீசில் செலுத்தி விடுகிறோம் எனக்கூறி வசூல் செய்ததாம். இதற்கிடையில், ‘பார்’களில் ஆய்வு மேற்கொண்ட டாஸ்மாக் அதிகாரிகள், டெபாசிட் தொகை செலுத்தவில்லை எனக்கூறி ‘பார்’களுக்கு ‘சீல்’ வைச்சாங்க. இதனால், அதிர்ந்துபோன ‘பார்’ உரிமையாளர்கள் அந்த கும்பலை தேடிச்சென்றனர்.

இதையறிந்த அந்த கும்பல், ஆபீசுக்கு பூட்டு போட்டு, ‘வாடகைக்கு’ என்ற போர்டை தொங்கவிட்டு எஸ்கேப் ஆகியிட்டாங்க. அவர்களது செல்போன் எண்களை தொடர்புகொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ என பதில் வந்ததாம். இதனால், பார் உரிமையாளர்கள் திகைத்து போய் உள்ளார்களாம். இதற்கிடையில், அந்த கும்பல் பற்றிய தகவல்களை சேரிக்கும் பணியில் மாநகர மற்றும் மாவட்ட உளவுப்பிரிவு போலீசார் தீவிரமாக களம் இறங்கி இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post புதுவையில் தலைமை செயலாளர் தேம்பி அழுத கதையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: