தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும்: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அதே இடத்தில் நிலவுகிறது. அதே நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் உருவாகியுள்ளது. இது இன்று (நேற்று) காலை 5.30 மணி அளவில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே இடத்தில் உள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.

தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 10ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். நாளை முதல் 10ம் தேதி வரை சூறாவளி காற்று வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் புடலூரில் 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது என்றார்.

* சென்னையில் 2வது நாளாக மழை
சென்னை உள்பட புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென மழை பெய்தது. இந்த மழை வெயிலால் சிக்கி தவித்த மக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி எடுத்தது. பிற்பகலில் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது. வெப்பத்தில் சிக்கி தவித்து வந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று மாலை 4 மணியளவில் சென்னையில் பல்வேறு இடங்களில் இடிமின்னலுடன் மழை பெய்தது. குறிப்பாக சென்னை மயிலாப்பூர், எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி, ராயப்பேட்டை, அண்ணாசாலை, சென்ட்ரல், எழும்பூர், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டையில் மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

The post தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும்: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: