வெளிநாட்டு முதலீடு பற்றி விஷமத்தனமான கருத்து தமிழ்நாட்டின் முதல் விரோதி ஆளுநர் ஆர்.என்.ரவி: வைகோ கண்டனம்

சென்னை: வெளிநாட்டு முதலீடுகள் பற்றி விஷமத்தனமான கருத்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் முதல் விரோதி. ஆளுநரை வெளியேற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை இழிவுப்படுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலகால விஷத்தைக் கக்கி இருக்கிறார். ஆளுநரின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழ்நாட்டின் முதல் விரோதியாக விளங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற வேண்டும். இல்லையேல் நாகாலாந்து மாநிலத்தில் மக்கள் விரட்டி அடித்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கும்.

கே.எஸ்.அழகிரி (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்): தமிழ்நாடு கவர்னர், தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், தமிழ் கலாச்சார உணர்வுகளுக்கு எதிராகவும் செயல்படுகிறார். தமிழர்களுக்கு எதிராக கருத்து சொல்வதே, அவருடைய முதல் சிந்தனையாகவும், முயற்சியாகவும் இருக்கிறது. இதனால் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு செல்வதால் அந்நிய முதலீடு வராது என தெரிவித்துள்ளார். கவர்னர் முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் பேசுகிறார்.

செல்வபெருந்தகை (காங்கிரஸ் எம்.எல்.ஏ): அந்நிய முதலீடுகளை பெறுவதற்காக வெளிநாடு சென்ற தமிழ்நாட்டின் முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை ஆளுநர் தேவையில்லாமல் விமர்சனம் செய்துள்ளார். இவரின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களின் நலனிற்கும் எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பாஜ, ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் போன்று செயல்படுவதையும், தேவையற்றவற்றைப் பேசுவதையும் ஆளுநர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

முத்தரசன் (இந்திய கம்யூ. மாநில செயலாளர்): வெளிநாடுகளுக்கு சென்று பேசுவதால் மட்டும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள் என்று ஆளுநர் பேசியுள்ளார். மாநில அரசின் அரசு கட்டமைப்பை வழிநடத்தும் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிதிகளிடம் தான் இருக்கிறது. கவர்னரிடம் இல்லை என உச்ச நீதிமன்றம் தெளிவாக வரையறுத்து உத்தரவிட்டுள்ளது. இதன் பிறகும் கவர்னர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை அதிகார அத்துமீறலாக தொடர்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.

The post வெளிநாட்டு முதலீடு பற்றி விஷமத்தனமான கருத்து தமிழ்நாட்டின் முதல் விரோதி ஆளுநர் ஆர்.என்.ரவி: வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: