செங்கோல் வழங்கியதால் விபத்தில் அதிகளவு மரணம் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு: எஸ்பியிடம் புகார் மனு

மயிலாடுதுறை: செங்கோல் வழங்கிய பிறகு விபத்தில் அதிகளவு மரணம் நடந்துள்ளதாக திருவாவடுதுறை ஆதீனத்துக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதீன பொதுமேலாளர், எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளார். மயிலாடுதுறை எஸ்பி நிஷாவிடம், திருவாவடுதுறை ஆதீன பொது மேலாளர் ராஜேந்திரன் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டபோது செங்கோலை திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமி உள்ளிட்ட மடாதிபதிகள், பிரதமர் மோடியிடம் வழங்கினர். இந்நிலையில் ஆட்சியாளர்களிடம் செங்கோலை ஒப்படைத்த ஒரு மண்டலத்துக்குள் விபத்தில் அதிகளவில் மரணங்கள் (ஒடிசா ரயில் விபத்து) நிகழ்வது நல்லதல்ல. தவறானவர்கள் கையில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது என கடவுள் கொடுக்கும் நிமித்த செய்தியாக கூட இது இருக்கலாம் என்று திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி அம்பலவாண தேசிக பிரமாச்சாரிய சுவாமி தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆதீனத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையிலும், மதமோதலை உண்டாக்கும் வகையிலும் இந்த பொய் செய்தி பரப்பப்படுகிறது. எனவே பொய் செய்தியை பரப்பி வரும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post செங்கோல் வழங்கியதால் விபத்தில் அதிகளவு மரணம் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு: எஸ்பியிடம் புகார் மனு appeared first on Dinakaran.

Related Stories: