பெற்றோருடன் நடைபாதையில் தூங்கிய 2 குழந்தைகள் கடத்தல்: இளம்பெண், வாலிபர் கைது

திருமலை: நடைபாதையில் பெற்றோருடன் தூங்கிய 2 குழந்தைகளை கடத்திய வாலிபரும், இளம்பெண்ணையும் போலீசார் கைது செய்து குழந்தைகளை மீட்டனர். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் பாரடைஸ் அருகே உள்ள நடைபாதையில் வசிப்பவர் மேகராஜ்காலே(40), பலூன் வியாபாரி. இவருக்கு மனைவி மற்றும் 7 குழந்தைகள் உள்ளனர். கடந்த 3ம்தேதி இரவு மேகராஜ் குடும்பத்தினர் வழக்கம்போல் நடைபாதையில் தூங்கினர். அதிகாலை எழுந்து பார்த்தபோது மகள் கரிஷ்மாவை(3) காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மகான்காளி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நகர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது டேங்க் பண்ட் பகுதியில் உள்ள நடைபாதையில் மஹ்பூப் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பம் தூங்கிக் கொண்டிருந்தது. அங்கு பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த சுமார் 7 மாத ஆண் குழந்தையை ஒரு வாலிபரும் ஒரு இளம்பெண்ணும் ஆட்டோவில் கடத்த முயன்றனர்.

இதை பார்த்த மகான்காளி போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் ஆட்டோவில் 2 குழந்தைகளுடன் வேகமாக சென்றனர். போலீசார் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பலக்நுமா என்ற பகுதியைச் சேர்ந்த ஷேக்இம்ரான்(36), நிஜாமாபாத்தைச் சேர்ந்த இளம்பெண் பர்வீன்(30) என்பது தெரிய வந்தது. இவர்கள் குழந்தை கடத்தியபோது பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் நீண்ட காலமாக ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். பிளாட்பாரங்களில் தூங்கும் குழந்தைகளை கடத்தி அவர்களை விற்பனை செய்துள்ளனர்.

தற்போது கடத்தப்பட்ட 2 குழந்தைகளையும் ரூ.2 லட்சத்திற்கு விற்க திட்டமிட்டிருந்ததும் இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இம்ரான், பர்வீன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 குழந்தைகளையும் மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தைகள் கடத்தப்பட்ட சில மணி நேரத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்ததற்கு வடக்கு மண்டல துணை ஆணையர் சந்தனதீப்தி நேற்று பாராட்டு தெரிவித்தார்.

The post பெற்றோருடன் நடைபாதையில் தூங்கிய 2 குழந்தைகள் கடத்தல்: இளம்பெண், வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: