பீகாரில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தலைவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்: நிதிஷ் குமார் வலியுறுத்தல்

பாட்னா: பீகாரில் நடக்கவிருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தலைவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் வலியுறுத்தி உள்ளார். வரும் 2024 மக்களவை தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜ அரசை தோற்கடிக்க காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல், மற்றும் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை வரும் 12ம் தேதி பீகாரின் பாட்னா நகரில் நடத்த நிதிஷ்குமார் திட்டமிட்டார். ஆனால், அந்த தேதியில் வேறு நிகழ்ச்சி இருப்பதால் பாட்னா கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டது. இதேபோல் வேறு சில கட்சிகளும் தெரிவித்திருந்தன. வேண்டுமென்றால் தங்கள் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதாக அந்த கட்சிகள் தெரிவித்தன. இதற்கிடையே, 12ம் தேதி நடைபெறும் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நேற்றுமுன்தினம் இரவு அறிவிக்கப்பட்டது.

இது குறித்து பாட்னாவில் நேற்று நிதிஷ்குமார் கூறுகையில், ‘‘எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி பிரதிநிதியை அனுப்ப திட்டமிட்டிருப்பதாக கேள்விப்பட்டேன். பிரதிநிதிகள் பங்கேற்பதை ஏற்று கொள்ள முடியாது. அதனால்தான் மற்ற கட்சிகளுடன் கலந்துபேசி கூட்டம் நடத்துவதற்கு வேறொரு தேதியை தெரிவிக்கும்படி காங்கிரசை கேட்டுக்கொண்டுள்ளேன்,” என்று தெரிவித்தார்.

* பாலம் இடிந்த விவகாரம் கடும் நடவடிக்கை பாயும்
பீகாரின் பகல்பூரில் மாவட்டத்தில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அணையின் ஒரு பகுதி நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் நிதிஷ் குமார், “பாலம் சரியான முறையில் கட்டப்படாததால் தான் 2வது முறையாக இடிந்து விழுந்துள்ளது. இதில் துறை ரீதியிலான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

The post பீகாரில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தலைவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்: நிதிஷ் குமார் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: