மாணவர் நலனில் அக்கறை

தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல், மே மாதங்கள் கடும் கோடை காலம். இந்த காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல், மே மாதங்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த மாதம் 28ம் தேதி வரை நீடித்தது. அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னர் படிப்படியாக வெப்பம் குறையும். ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி விடும். பருவமழை காலத்திற்கான அறிகுறியாக தென்மேற்கு பருவக் காற்று, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து வீசும். பருவக் காற்று தொடங்கி விட்டால் இதமான சூழ்நிலை நிலவும். வெப்பம் தணிந்து விடும்.

ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஜூன் மாதம் பிறந்த பின்பும் கடும் வெப்பம் நீடித்து வருகிறது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும். இந்த ஆண்டும் 6 முதல் பிளஸ்2 வரையில் ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகளை திறக்க திட்டமிட்டிருந்தது, பள்ளிக் கல்வித் துறை. பள்ளிகள் திறப்பிற்கான ஆயத்தப் பணிகளும் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கின. குறிப்பாக பள்ளி கட்டிடங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளதா, பழுதடைந்த கட்டிடங்கள் இருக்கிறதா என மாவட்ட கலெக்டர்கள் உன்னிப்பாக கவனிக்க குழுவை ஏற்பாடு செய்து ஆய்வும் செய்தனர். இதன் மூலம் குறித்த காலத்தில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் கத்திரி வெயில் முடிந்த பிறகும் வெப்பம் தணியவில்லை, மாறாக அதிகரித்தது. கடும் வெப்பம் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர ஜப்பான் சென்ற போதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளி மாணவ, மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை ஜூன் 7ம் தேதிக்கு தள்ளி வைத்து அறிவிப்பு வெளியிட்டார். ஆனாலும் நேற்று வரை வெப்பம் தணியவில்லை. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வெப்பம் தகித்து வருகிறது. வெயில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. எனவே பள்ளிகள் திறப்பை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்குமாறு பெற்றோர், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கோரிக்கை எழுந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, அமைச்சர்கள், கல்வித் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்தது. அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளது. மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் கல்விச் சாலைகளில் இதமான சூழல் இருக்க வேண்டும். வெப்பம் தகிக்கும் சூழ்நிலையில் கல்விச் சாலைகளை திறப்பது சரியாக இருக்காது என்று கருதி பள்ளிகள் திறப்பை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளது பள்ளிக் கல்வித் துறை. ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகளை திறக்கவும் முடிவு செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முடிவை மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர். மாணவர்கள் நலனில் தமிழ்நாடு அரசு கொண்டுள்ள அக்கறை தொடரட்டும்.

The post மாணவர் நலனில் அக்கறை appeared first on Dinakaran.

Related Stories: