சேலம்காரர் மனசுல நிரந்தர இடம் பிடிக்க பொதுக்கூட்டம் நடத்திய மாஜி பெல் அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘குளிர்பானங்கள் கொடுத்தால் மனம் குளிர்ந்து கூட்டம் கூடிவிடுமா என்ன…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் சேலம்காரருக்கு சின்னம் ஒதுக்கினாலும் இன்னும் இரண்டு தரப்பிலும் முடிவுக்கு வராத நிலைதானாம். இதில் சேலம்காரர் அணியில் உள்ள கடலோர மாவட்ட மாஜி அமைச்சர் ‘பெல்லானவர்’ தலைமையில் அவரது மாவட்டத்தில் நடை பெறும் ஆர்ப்பாட்டம், கூட்டங்களில் 2ம் கட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் வருவது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறதாம். இதற்கான காரணத்தை அவரால் கண்டு பிடிக்க முடியவில்லையாம். முதல் கட்ட நிர்வாகிகளிடம் கேட்டால் அவர்களும் அவரை மதிப்பது இல்லையாம். இதில் உச்ச கட்ட டென்சனில் இருக்கும் பெல்லானவர், சில தினங்களுக்கு முன்பு தனது தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிக கூட்டத்தை கூட்டி தான் யார் என்பதை சேலம்காரருக்கு காட்ட வேண்டும் என்று அதிரடியாக முடிவு எடுத்தாராம்.

இதற்காக ஆர்ப்பாட்டம் தொடங்கி முடியும் வரை மோர், சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்களை அவரது ஆதரவாளர்கள் மூலமாக கொடுத்துள்ளாராம். இதை விட ஹைலைட்டாக வெள்ளை நிற தொப்பியை அனைவருக்கும் கொடுத்து தலையில் அணிவிக்க வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டாராம். பின்னர் அவர்களுடன் சேர்ந்து போட்டோவும் எடுத்து வைத்து கொண்டாராம். இதை எல்லாம் தலைமை இடத்துக்கு அனுப்பி வைத்து பாராட்டு வாங்க வேண்டியதுதான் என்பது அவரது திட்டமாம். இதற்காக ஆர்ப்பாட்டத்துக்கு வந்த பெரிய அளவிலான கூட்டம் கூடியதாக பதிவு செய்து கொண்டாராம். ஆனால், உண்மையிலேயே குறைந்தளவு தான் கூட்டமே இருந்ததாம்… சேலம்காரருக்கு தன் மீது நம்பிக்கை வர வேண்டும் என்று தான் இந்த அலப்பறையாம் என்று தொண்டர்கள் பேசி கொண்டனர்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வீடியோ எடுத்து ஆதாரம் சேகரிக்க போட்டி போடும் கல்லூரி எங்கே இருக்கு… யாருக்கு எதிராக இந்த வீடியோ…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறாங்க. சமீப காலமாக இந்த கல்லூரியில் தேவையற்ற சர்ச்சைகளாம். கல்லூரியின் முதல்வர் மாணவிகளின் நலனுக்கு எதிராக செயல்படுவதாக கூறி, அவரை உயர்கல்வித்துறை சஸ்பெண்ட் செஞ்சாங்க. ஆனால், அந்த கல்லூரி முதல்வரோ இந்த உத்தரவுக்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று மீண்டும் அதே கல்லூரியில் பணியில சேர்ந்துட்டாராம்.
இந்த நிலையில் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியருங்க, கல்லூரி முதல்வருக்கு எதிரா போர்க்கொடி தூக்கியிருக்காங்க. ஒரு சில மாணவிகளை சேர்த்து, போராட்டமும் நடத்தியிருக்காங்க. இப்போ கல்லூரிக்குள்ள யார பார்த்தாலும் செல்போனும் கையுமா ஒருத்தர மாத்தி ஒருத்தருன்னு வீடியோ எடுத்துக்கிட்டு இருக்காங்க. கல்லூரி முதல்வரை யாரெல்லாம் சந்திக்க வர்றாங்க.. அவங்களை பேராசிரியைகள் வீடியோ எடுக்கிறாங்க. கல்லூரி முதல்வருக்கு எதிராக செயல்படுறவங்கள, அவங்க கல்லூரியில் என்ன வேலை செய்கிறாங்க, ஓபி அடிக்கிறாங்களா, கிளாஸ்க்கு போகாம அரட்டை அடிக்கிறாங்களான்னு முதல்வரும் தன்னோட மொபைல்ல வீடியோ எடுக்கிறாங்க, இதனால கல்லூரியில யார் கையில செல்போன் பார்த்தாலும் மாணவிகள் மட்டுமில்ல, பேராசிரியர்களும் அச்சத்துடனே இருக்காங்க…’’ என்றார் விக்கியானந்தா

‘‘தலைமை ஆசிரியர் டென்ஷனில் இருக்காராம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் சிட்டியில தோட்டம் என்று தொடங்குற நடுநிலை பள்ளி இயங்கி வருது. இந்த பள்ளியில ஹெட் ஆசிரியராக திருச்செந்தூர் கடவுள் பெயரை கொண்டவர் பணியாற்றி வர்றாரு. இவரு அங்க பணியாற்றி வர்ற ஆசிரியைகளிடம் அத்துமீறுவதாக புகாராம். இப்படி அங்க பணியாற்றி வர்ற 7 ஆசிரியைகளும், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகிட்ட, ஹெட் ஆசிரியர் மேல புகார் அளிச்சிருக்காங்க. அந்த புகார்ல, கண்காணிப்பு என்ற பெயர்ல ஆசிரியைகளிடம் அத்துமீறி செயல்படுறாரு. விதிகளுக்கு முரணாக செயல்படுறாருன்னு குறிப்பிட்டிருக்காங்க. இந்த புகாரை, உள்ளூர் குழு விசாரிச்சு, அந்த அறிக்கையை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகிட்ட கொடுத்து இருக்காங்களாம். அதுக்கு அப்புறமா, ஹெட் ஆசிரியரை மாற்றுப்பணிக்காக, மலைப்பகுதியில இருக்குற நடுநிலைப்பள்ளிக்கு டிரான்ஸ்பர் போட்டுட்டாங்களாம். வெயிலூர் சிட்டியில 7 ஆசிரியைகள் புகார் தான் இப்ப பரபரப்பாக பேசப்படுதாம். அதுவும் வெற்றி, வெற்றினு பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

The post சேலம்காரர் மனசுல நிரந்தர இடம் பிடிக்க பொதுக்கூட்டம் நடத்திய மாஜி பெல் அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: