ஆலத்தூர் தாலுகா பகுதிகளில் சின்ன வெங்காயம் நடவு பணியில் விவசாயிகள்

பாடாலூர் : பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பகுதிகளில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் தற்போது தங்களது நிலங்களில் சின்னவெங்காயம் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தமிழ்நாட்டில் சின்ன வெங்காயம் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்தை வகிக்கிறது. ஆலத்தூர் தாலுகாவில் பாடாலூர், இரூர், ஆலத்தூர்கேட், நாட்டார்மங்கலம், நாரணமங்கலம், செட்டிகுளம், குரூர், சிறுவயலூர், நக்கசேலம், டி.களத்தூர், அடைக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.

நடப்பாண்டில் ஆலத்தூர் தாலுகாவில் சராசரியாக 3,396 எக்டேர் பரப்பளவில் 33,960 மெட்ரிக்டன் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. சித்திரை, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி, மாசி ஆகிய மாதங்களில் சின்ன வெங்காயம் நடவு பணி மேற்கொள்ளப்படும். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கிணற்றுப் பாசனம் மூலம் ஆலத்தூர் பகுதிகளில் உள்ள பாடாலூர், இரூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், மருதடி, காரை, நாட்டார்மங்கலம் செட்டிகுளம், குரூர், சிறுவயலூர், டி.களத்தூர் அடைக்கம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பே விவசாயிகள் தங்களது நிலத்தில் உழுது அடி உரமிட்டு சின்ன வெங்காயம் நடுவதற்காக கரை அமைத்து மழைக்காக காத்திருந்தனர். மழை கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக பெய்தது. தற்பொழுது கிணற்றுப் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி சின்னவெங்காயம் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,ஒரு ஏக்கர் சின்ன வெங்காயம் நடவு செய்ய சுமார் 600 கிலோ முதல் 700 கிலோ வரை விதை வெங்காயம் தேவைப்படுகிறது. அதனால் விதை நிலையம் மட்டும் சுமார் ரூ 25 முதல் ரூ 30 ஆயிரத்திற்கு வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதன் பின்னர் அடி உரம், பூச்சி மருந்து, வெங்காயம் நடவுப்பணி, களை எடுக்கும் பணி, அறுவடைப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் தேவைப்படுகிறது.

தற்பொழுது அதிகளவில் கம்பு, நிலக்கடலை பயிர் அறுவடை பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும், தற்பொழுது கடந்த ஒரு வார காலமாக சின்ன வெங்காயம் விதைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தற்பொழுது சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய வேண்டும் என்றால் பெரிய தொழிலுக்கு முதலீடு செய்வது போல் பெரியளவில் முதலீடு தேவைப்படுகிறது.

The post ஆலத்தூர் தாலுகா பகுதிகளில் சின்ன வெங்காயம் நடவு பணியில் விவசாயிகள் appeared first on Dinakaran.

Related Stories: