பாடாலூர் அருகே செட்டிகுளம் பகுதியில் கம்பு அறுவடை பணி தீவிரம்

பாடாலூர் : பெரம்பலூர் மாவட்டம் என்றாலே சின்ன வெங்காயத்திற்கு தனி சிறப்பு உண்டு. மாநில அளவில் சின்ன வெங்காயம் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் முதன்மை பெறும் மாவட்டமாக திகழ்கிறது. தற்போது ஆலத்தூர் தாலுகா பகுதியில் அதிகளவில் வானம் பார்த்த பூமியான மானாவரி நிலங்களே அதிக அளவில் உள்ளது. ஆலத்தூர் தாலுகாவின் பல்வேறு கிராம பகுதியில் கிணற்று பாசனங்கள் மூலம் பல விவசாயிகள் வெங்காயம், நிலக்கடலை, நெல், எள்ளு, உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். உடல் நலம் குறித்து வளர்ந்து வரும் விழிப்புணர்வால் சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனால், சிறுதானியச் சாகுபடியில் பல விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள செட்டிகுளம், நாட்டார்மங்கலம் இரூர், ஆலத்தூர்கேட், பாடாலூர்,மாவிலிங்கை, நக்கசேலம், டி.களத்தூர், போன்ற கிராமங்களில் குறைந்த அளவு நீரால் கம்பு சாகுபடி நல்ல லாபம் கிடைப்பதால், இப்பகுதியில் கம்பு சாகுபடியின் பரப்பு அதிகரித்து வருகிறது. வறட்சியை தாங்கி குறைந்த அளவு நீரைக் கொண்டு வளரும் பயிராக கம்பு உள்ளது. நடவு செய்து 70 நாளில் இருந்து 90 நாளில் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 18 மூட்டை முதல் 20 மூட்டை வரை விளைச்சல் கிடைக்கும். தற்பொழுது 100 கிலோ எடை கொண்ட மூட்டை ரூ.2,200 முதல் ரூ. 2,500 விற்பனை செய்யப்படுகிறது. பராமரிப்பு செலவினம் குறைவு மற்றும் கால்நடை தீவனத்திற்கு கம்பு தேவை அதிகரித்துள்ளது. இதனால் கம்பு சாகுபடி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குரூர் கிராமத்தை சேர்ந்த கம்பு சாகுபடி விவசாயி தர்மராஜ் கூறுகையில்:ஒரு ஏக்கர் கம்பு சாகுபடி செய்ய 2 கிலோ விதை தேவைப்படுகிறது. ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய உழவு, களை எடுத்தல், மருந்து தெளித்தல் உரமிடுதல் அறுவடை செய்தல் என ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவாகிறது. கம்பு சாகுபடியின் நீரின் தேவை குறைவு கடந்த சில ஆண்டுகளாக கம்பின் தேவை அதிகரித்து வருகிறது. இதற்கு கட்டுபடியான விலையும் கிடைப்பதால், விவசாயிகள் அதிக பரப்பில் பயிரிட்டு வருகின்றனர். இது கால்நடைகளின் முக்கிய தீவனமாக மாறிவிட்டது, என்றனர்.

The post பாடாலூர் அருகே செட்டிகுளம் பகுதியில் கம்பு அறுவடை பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: