முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி வசமாகும்!

அறிஞர் பெர்னாட்ஷா சொல்கிறார், எனக்குக் கிடைத்த வாழ்க்கை ஒரு தீபம், அது அணைவதற்கு முன் பிரகாசமாக எரியச்செய்ய ஆசைப்படுகின்றேன் என்று, ஆம்,அந்த பிரகாசம் எப்படி கிடைக்கிறது. மின்மினிப்பூச்சிகளை கொஞ்சம் கவனித்து பாருங்கள்.அது பறக்கும்போது தான் பிரகாசம் கிடைக்கிறது.பறப்பது என்பது என்ன?அது செய்யும் செயல் தானே, அது போல மனிதனும் செயல்படும் போதுதான் பிரகாசம் அடைகின்றான். அந்தப் பிரகாசம் உழைப்பில் கிடைக்கின்ற வெகுமதி. தீப்பந்தத்தைத் தலைகீழாகப் பிடித்தாலும் அதன் ஜூவாலை மேல்நோக்கியே நிமிர்ந்து நிற்கும். அதுபோல மனஉறுதி படைத்தவர்களைக் குப்புறத் தள்ளினாலும் மேலே வந்து சாதித்துக்காட்டுவார்கள். வாழ்வியலும், வரலாறும் காட்டுகின்ற உண்மை இது.‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று கணியன் பூங்குன்றன் சொன்னதைப்போல வேதனைக்கும் சாதனைக்கும் காரணம் அவரவர் மனமே. அடுத்தவர்களைக் குறை சொல்வது சரியல்ல, சூழல்கள் நமக்கு சரியாக இல்லை என்பது முறையல்ல.

மெக்சிகோ நாட்டில் தச்சர்களை பற்றிய ஒரு கதை உண்டு. மிக அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய மாளிகையை செய்யக்கூடிய தச்சன் ஒருவன் இருந்தான். அவன் வீடுகளை வடிவமைப்பதில் மிகுந்த திறமைசாலி. பல வருடங்களாக மன்னரிடம் வேலை செய்து வந்தான். தனது கலைத்திறமை அத்தனையும் காட்டி அவன் கட்டிக் கொடுத்த மாளிகையைப் பற்றி உலகமே புகழ்ந்து பேசியது. ஆனால் மன்னர் ஒரு வார்த்தைகூட அவனிடம் புகழ்ந்து பேசவில்லை. அதனால் அவன் ஆத்திரம் அடைந்திருந்தான்.தச்சனுக்கு வயதாகிக்கொண்டே வந்தது. மன்னர் அவனை கண்டுகொள்ளவே இல்லை. இனி மேலும் எதற்காக வேலை செய்ய வேண்டும் என்று நினைத்து மன்னரிடம் சென்று தான் ஓய்வுபெறப் போவதாகச் சொன்னான். மன்னர் அது உன் விருப்பம், ஆனால் அதற்கு முன்பாக எனக்கு ஒரு மாளிகை கட்ட வேண்டும். அதை மட்டும் முடித்துக் கொடுத்துவிட்டு ஓய்வு பெறு என்று கட்டளையிட்டார்.ஆனாலும் அரச கட்டளை என்பதால் சம்மதித்தான்.

அந்த வேலையில் அவனுக்கு நாட்டமே இல்லை. ஏனோதானோ என்று வேலை செய்தான். ஆறு மாதங்களில் கட்டடம் கட்டி முடித்துவிட்டான். மன்னர் வந்து பார்த்துவிட்டு இவ்வளவுதானா இன்னும் வேலைப்பாடு இருக்கிறதா? என்று கேட்டார். அவ்வளவுதான்! இனி செய்வதற்கு எதுவும் இல்லை என்றான் தச்சன். மறுநாள் மன்னர் அவனை அரண்மனைக்கு வர சொன்னார். தச்சன் வந்து சேர்ந்தான். அப்போது மன்னர் தச்சனைப் புகழ்ந்து பேசினார். அவர் ஓய்வு பெறுவதை முன்னிட்டு எனது பரிசாக அவருக்கு புதிதாகக் கட்டிய வீட்டையே தருகிறேன் என்று அவர் மகிழ்ச்சி பொங்க அறிவித்தார். தச்சனால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தனது வீட்டைக் கட்டுகிறோம் என்று தெரிந்திருந்தால் எவ்வளவு வேலைப்பாடு செய்திருக்கலாம். எவ்வளவு கவனம் செலுத்தி இருக்கலாம் என்று மனதிற்குள்ளாகப் புலம்பிக்கொண்டான். ஈடுபாடு இல்லாமல் செய்யும் செயல் இது போன்று தான் அமையும். தனது சொந்தக் காரியத்தை போல் ஈடுபாட்டுடன் செயல்பட்டு இருந்தால் நிச்சயம் பலன் கிடைத்து இருக்கும். தனது அக்கறையின்மைதான் காரணம் என்பதை தச்சன் புரிந்து கொண்டான். ஈடுபாடு இல்லாமல் செய்யும் செயல், விழலுக்கு இறைத்த நீர்தான்.

உங்களைச் சுற்றி எந்தவிதமான சூழல்கள் இருந்தாலும், நீங்கள் செய்யும் செயலில் நீங்கள் கொண்ட இலட்சியத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். அதற்கு உதாரணமாய் இந்த உலகில் பலர் சாதித்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் பெரும்குழந்தைகளுக்குபான்மையான பெண்களின் ஒருமித்த கருத்து ‘கல்யாணத்திற்குப் பிறகு என் கனவு தடைப்பட்டுவிட்டது’ என்பதே.பெண்கள் படிப்பு முடித்து, தங்களுக்கு ஆர்வமுள்ள துறையில் நுழைந்து, ஓரளவிற்கு அனுபவமும் பெற்று, அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரைவாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும்போது, திருமணம் அவர்களுக்கு வேகத்தடையாக மாறிவிடுகிறது. ஆனால் திருமணத்திற்குப் பிறகும் சில பெண்களுக்கு சரியான சூழல் அமைந்து விடுகிறது. இவர்களால் தங்கள் லட்சியங்களையும் தொட்டு விட முடிகிறது. ஆனால், பலரது வாழ்க்கையில் திருமணம் தற்காலிகமாக ஒரு முட்டுக்கட்டையைப் போட்டுவிடுவதே நிதர்சனம். இருந்தபோதும் எந்த சூழலிலும் ஈடுபாடு கொண்டு உழைத்தால் எப்படிப்பட்ட சூழலிலும் கனவை நனவாக்கிக் கொள்ளலாம் என நிரூபித்திருக்கிறார் புஷாரா பானோ.

புஷாரா பானோ உத்திரப்பிரதேசத்தில் உள்ள கன்னோஜ் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரது தாத்தா இந்திய காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்தவர்.இதனால் இளம் வயதிலேயே புஷாராவின் மனதில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும். உயர்அதிகாரியாக உருவாக வேண்டும் என்ற விதையை தன்னுடைய மனதில் விதைத்து கொண்டார்.புஷாரா பணி காரணமாக சவுதி அரேபியா சென்றார். அங்கு உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார், என் உழைப்பு என் நாட்டிற்கு பயனளிக்கவேண்டும் என்று விரும்பினார். சவுதி அரேபியாவில் தொடர்ந்து வேலை செய்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று எத்தனையோ பேர் அவரிடம் எடுத்துச் சொன்னார்கள். ஆனால் என் நாட்டு மக்களுக்கு நான் சேவை செய்யவேண்டும் யுபிஸ்சி தேர்வு எழுதி உயர் அதிகாரியாக வேண்டும் என்கிற இலக்கில் புஷாரா உறுதியாக இருந்தார். தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பினார்.
2017ம் ஆண்டு இவர் முதன் முறையாக முதல்நிலைத் தேர்வு எழுதினார். ஆனால், அதில் தேர்ச்சி பெறவில்லை.இருப்பினும், முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு, தொடர்ந்து பயிற்சியும், விடா முயற்சி செய்து மீண்டும் தேர்வு எழுதினார். தேர்வுக்கு முந்தைய நாள் அவரின் நெருங்கிய உறவினர் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் அவரைப் பெரிதும் உலுக்கியது.இருந்தபோதும் மனம் தளராமல், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு தேர்வை எழுதினார்.

இவர் எழுதிய தேர்வு கைகொடுத்தது. அதனால் நேர்காணல் வரை சென்றார். அந்த சமயத்தில் இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தார். தன்னுடைய சுமைகளை எல்லாம் மனத்தளவில் சுகமான சுமைகளாக மாற்றிக்கொண்டார்.புஷாரா பானோ திருமணத்திற்குப் பிறகு நான்கு முறை யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி கடைசி முறையில் தான் தேர்ச்சி பெற்று சாதித்து உள்ளார்.புஷாரா படிப்பதை திட்டமிட்டு படித்து விரைவாகப் புரிந்துகொள்வார். காலை நேரத்தில் மூன்று மணிநேரம் படிப்பது.வேலை நேரத்தில் ஓய்வு கிடைக்கும்போதும் படிப்பது. வீடு திரும்பியதும் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு இரவு மூன்று மணி நேரம் படிப்பது என்று முறையாக திட்டமிட்டு தினமும் ஆறு மணி நேரம் படிப்பிற்காக ஒதுக்கி தொடர்ந்து படித்து உள்ளார். திருமணத்திற்கு பிறகு படிப்பு,தேர்வு, வேலை என அனைத்தையும் சமாளிப்பது சவாலான விஷயம்தான். மறுப்பதற்கில்லை. ஆனால் முறையாக திட்டமிட்டு ஒரு நாளைத் தொடங்கினோமானால் அனைத்தும் சாத்தியம் என்று உற்சாகமாக கூறுகிறார் புஷாரா. மேலும் நம்மைச்சுற்றி இருபவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை.உங்கள் இலட்சியத்தை அடைய திருமணம், குழந்தைப்பேறு இப்படி எதுவுமே தடை இல்லை என்பதுதான் இவரது வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. இவரை போலவே நீங்களும் உங்கள் இலட்சியத்தை அடைய முழு ஈடுபாட்டுடன் செயல்படுங்கள், வெற்றியை வசப்படுத்துங்கள்.

பேராசிரியர்:
அ.முகமதுஅப்துல்காதர்

The post முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி வசமாகும்! appeared first on Dinakaran.

Related Stories: