ஆடி அமாவாசைக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக சதுரகிரி ஓடைகளில் பாலம் அமைக்க வேண்டும்-பக்தர்கள் கோரிக்கை

வத்திராயிருப்பு : ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் குவியக்கூடும் என்பதால், சதுரகிரி மலை ஓடைகளில் பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. அமாவாசை, பௌர்ணமி ஆகியவற்றிற்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கோயில் மலைப்பகுதிகளில் மழை பெய்தால் முக்கிய இடங்களில் நீர்வரத்து அதிகமாகும். இதனால் பொதுமக்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி மறுக்கப்படுகிறது. மழைக்காலங்களில் பக்தர்கள் இடையில் சிக்கிக்கொண்டால் தகவல் அறிந்து ஓடைகளில் கயிறு கட்டி பக்தர்களை மீட்டு வருகின்றனர்.

தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு விசேஷ நாட்களில் நள்ளிரவு முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு குவிகின்றனர். பக்தர்களின் வருகையை பொறுத்து காலை ஆறு மணிக்கு பிறகு விடிந்து வெளிச்சம் வந்த பின்பு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.கடந்த ஐப்பசி மாதம் அமாவாசை பௌர்ணமி மழையால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். வனத்துறை கேட்பு முன்பு பத்தி சூடம் ஏற்றி சாமி கும்பிட்டு செல்கின்றனர்.

எனவே மழைக்காலங்களிலும் பக்தர்கள் சிரமமின்றி கோயிலுக்கு சென்று வருவதற்கு நீர்வரத்து ஓடைகளில் பாலங்கள் அமைக்க வேண்டுமென தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஏற்கனவே இடைப்பட்ட இடங்களில் பாலங்கள் அமைப்பதற்கு ஆய்வு செய்யப்பட்ட நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை நீர்வரத்து ஓடைகளில் பாலங்கள் அமைக்க வேண்டும். தாணிப்பாறை வனத்துறை கேட்டில் இருந்து கோயில் வரை பாதையை அகலப்படுத்த வேண்டும்.

பக்தர்கள் இளைப்பாற நிழற்குடை அமைக்க வேண்டும், குடிநீர் வசதி, சோலார் மின்விளக்குகள், கழிப்பறைகள் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருகிற ஆடி அமாவாசை ஆகஸ்ட் 16ம் தேதி வர உள்ள நிலையில் அதற்குள் ஆய்வு செய்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பக்தர்கள் கூறுகையில், ஆடி அமாவாசை வருகிற ஆகஸ்ட் 16ம் தேதி வருகிறது இதனை அடுத்து தற்போது கோயில் பகுதியில் உள்ள தற்காலிக காவல் நிலையம் ஆடி அமாவாசை வரை முழு நேரமும் இயங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தாணிப்பாறை வனத்துறை கேட்பகுதியில் தற்காலிக காவல் நிலையம் அமைத்து இப்போது இருந்தே கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். மருத்துவ குழுவினர் முக்கிய இடங்களில் இருப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அந்த நேரத்தில் மழை பெய்து ஓடையில் தண்ணீர் அதிகமாக வந்த போதும் பக்தர்களை எந்தவித சிரமமும் இன்றி ஓடையில் இருந்து கயிறு கட்டி பாதுகாப்பாக அடிவாரத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். அதேபோன்று தேவையான வசதிகளையும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அதே வேளையில் கோயிலுக்குச் செல்லும் பாதையில் பெரிய கற்களாக உள்ள இடங்களில் கற்கள் மீது மண் போட்டு பாதை நடந்து செல்வதற்கு ஏதுவாக சீரமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

The post ஆடி அமாவாசைக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக சதுரகிரி ஓடைகளில் பாலம் அமைக்க வேண்டும்-பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: