பயிர்களை வளமாக்கும் பறவைக்கரைசல்

தற்போது இயற்கை இடுபொருட்களைக்கொண்டு விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் கொண்டு விவசாயம் பார்ப்பதில் உள்ள கெடுதல்களை உணர்ந்து இயற்கை வழி விவசாயத்திற்கு திரும்பி வருகிறார்கள் பலர். இயற்கை விவசாயத்தின் மகிமையை உணர்ந்த பலர் ஐடி துறை உள்ளிட்ட கை நிறைய சம்பளம் கொடுக்கும் வேலைகளையும் உதறிவிட்டு கிராமங்களுக்கு படையெடுக்கிறார்கள். இதனால் பஞ்சகவ்யம், மீன் அமிலம், அமிர்த கரைசல், மூலிகை கரைசல், பத்திலை கரைசல் போன்ற இயற்கை பொருட்களின் மவுசு வெகுவாக கூடி வருகிறது. இந்த வரிசையில் பறவைக் கரைசலும் பயிர்களுக்கு நல்ல வளர்ச்சியூக்கியாக பயன்பட்டு வருகிறது.

பறவைக்கரைசல் தயாரிக்கும் முறை:

கோழிகள் இறந்துவிட்டால் அவற்றை அப்படியே வீசுவார்கள். அல்லது புதைப்பார்கள். இதையெல்லாம் செய்யாமல் இறந்த கோழிகளை எடுத்து வந்து பறவைக்கரைகலை தயாரிக்கலாம். உயிரிழந்த 16 கோழிகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, அதனை 40 லிட்டர் அளவு கொண்ட டின்னில் போட்டுக் கொள்ளவும். அதோடு 1 லிட்டர் கரும்புச்சாற்றை சேர்த்துக் கொள்ளவும். அதில் தேவையான அளவு சாணிக்கரைசல் மற்றும் தண்ணீரை ஊற்றி ஒரு சாக்குப்பையால் மூட வேண்டும். அந்த டின்னை நிலத்தில் வைத்து, அதன்மீது கோழிக்கழிவுகளை பரப்பி மூட வேண்டும். தொடர்ந்து குறைவான ஈரப்பதத்துடன் இருக்கும்படி மூன்று மாதம் வைக்க வேண்டும். இவ்வாறு துண்டுகளாக வெட்டப்பட்ட கோழிகள், பாக்டீரியாவின் துணையோடு கரைசலாக மாறுகிறது. இதை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தலாம். இந்தக் கரைசலை தென்னை, நெல்லி, சப்போட்டா, மாதுளை போன்ற மரங் களின் வேர்ப்பகுதியை சுற்றி ஒரு வருடத்திற்கு 4 லிட்டர் வீதம் ஊற்றினால் நல்ல மகசூல் கிடைக்கும். அதேபோல் பருத்தியை தாக்கும் பூச்சிகளை 6 லிட்டர் கரைசலுக்கு, 4 லிட்டர் நீர் வீதம் சேர்த்து, தெளிப்பதன் மூலம் பூச்சிகளையும் கட்டுப்படுத்த முடியும்.

The post பயிர்களை வளமாக்கும் பறவைக்கரைசல் appeared first on Dinakaran.

Related Stories: