கோபுரக்கலசங்களில் விதை சேமிப்பு : வேளாண்துறை அதிகாரியின் சுவாரஸ்ய தகவல்கள்

‘‘தமிழ்நாடு அரசின் சின்னமே திருவில்லிபுத்தூர் கோயிலின் கோபுரம்தான். இன்னும் பல கோயில்களின் கோபுரங்கள் தமிழகத்தின் அடையாளங்களாக உயர்ந்து நிற்கின்றன. இத்தகைய கோபுரங்களின் உச்சியில் உள்ள கலசங்களில் நெல், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்கள் சேமித்துவைக்கப்படும் வழக்கம் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கத்தின் பின்னே நம் முன்னோர்களின் இயற்கை சார்ந்த அறிவு, வருங்கால சந்ததியினரின் மீதான அக்கறை உள்ளிட்ட விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன” என்கிறார் திருநெல்வேலி விதை பரிசோதனை ஆய்வகத்தின் வேளாண்மை அலுவலர் மகேஸ்வரன். கோயில் கோபுரம், தானிய சேமிப்பு உள்ளிட்டவை குறித்து அவர் அளிக்கும் தகவல்கள் சுவாரஸ்யம் மிக்கவை.

‘‘பண்டைய காலத்தில் நமது முன்னோர் பயன்படுத்தியது பண்டமாற்று முறையைத்தான். அவர்கள் விளைவிக்கும் தானியங்கள்தான் அவர்களின் அனைத்து தேவைகளுக்கும் பயன்பட்டது. விவசாயி களின் வாழ்வாதாரமும் அதுதான். வயல் களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் அதுதான். விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைவிக்கும் தானியங்கள் அவர்களுக்கு பல வகைகளில் பயன்பட்டது. அதை தங்களின் உணவுத்தேவைக்கும், அடுத்த பருவ விதைப்புக்காகவும் குதிர்களில் சேமித்தனர். குறிப்பாக சிறு, குறு விவசாயிகள் இந்த முறையிலேயே அதிகளவில் தானியங்களை சேமித்து வைத்தனர். பருவமழைக் காலங்களில் மழை தொடர்ந்து பெய்துகொண்டிருக்கும். அப்போது வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும். அதுபோன்ற சூழலில் குதிர்களில் சேமித்த நெல்லை எடுத்து உணவாக்கி உண்டு பசியாறுவார்கள். நமது தமிழ்ச்சான்றோர் சிலர் இன்னும் ஒருபடி கூடுதலாக யோசித்து, கோயில் கோபுரங்களின் மேலே உள்ள கலசங்களில் தானியங்களை சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கி உள்ளனர்.

அந்த காலத்தில் மழை பொழிந்து பெரிய அளவில் வெள்ளம் வரும். பிரளயம் ஏற்படும். கடல்கோள் வந்து ஊர் அழிந்ததாக நாம் படித்திருக்கிறோம். இதுபோன்ற பல்வேறு இயற்கைச்சீற்றங்களால் உலகமே அழியும் சூழல் ஏற்பட்டாலும் எஞ்சி பிழைத்து உயிர் வாழும் ஒரு சிலரால் மீண்டும் உலகம் தழைக்கட்டும் என்ற எண்ணத்துடன் நமது மூதாதையர்கள், தானியங்களின் விதைகளை பாதுகாக்க ஒவ்வொரு ஊரிலும் கோபுரங்களை அமைத்துள்ளனர். இதற்காக கோயிலைக் கட்டி வானளாவிய கோபுரங்களை அமைத்து, அதில் பல்ேவறு தானியங்களை சேமித்துள்ளனர். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதைக்கூட இதை வைத்துத்தான் சொல்லியிருப்பார்கள்.
ஒரு விதையின் முளைப்புத்திறன், அவ்விதையினுள் இருக்கும் ஈரப்பதம், சுற்றுப்புறச் சூழலில் காணப்படும் வெப்பநிலை மற்றும் சேமிக்கப் பயன்படுத்தப்படும் கலன்கள் ஆகியவற்றைப் பொருத்து பாதிக்கப்படும் என்பதை நன்கு அறிந்த நமது முன்னோர்கள், விளைவித்த தானியத்தை தேவையான அளவில் காயவைத்து மேற்கூறிய காரணிகளால் பாதிக்காத வகையில், தாமிரம்,பித்தளை போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட கோயில் கோபுரக் கலசங்களில் சேமித்து வைத்துள்ளனர்.

இவ்வாறு கோபுரக் கலசங்களில் சேமித்து வைக்கப்படும் விதைகளின் முளைப்புத்திறன் 12 ஆண்டுகள் வரை நீடித்து இருக்கும். அதன்பிறகு அதன் முளைப்புத்திறன் பாதிக்கப்படும் என்பதால்தான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில் கோபுரக் கலசத்திலுள்ள பழைய விதைகளை நீக்கிவிட்டு புத்தம்புது விதைகளைக் கொண்டு மீண்டும் நிரப்ப வேண்டி, கும்பாபிஷேகம் என்ற நடை முறையைக்கொண்டுவந்துள்ளனர். அதை ஊரே கொண்டாடும் திருவிழாவாகவும் மாற்றியுள்ளனர். இந்த முறையில் கோபுரக் கலசங்களில் விதைகளை சேமித்து வைக்கும் நடைமுறை ஆரம்பித்த காலத்தில் இருந்த தட்பவெப்ப காலநிலை வேறு. தற்போது நிலவும் காலநிலை வேறு என்பதை உணர்ந்து, அதன் மூலம் முளைப்புத்திறன் எவ்விதம் இருக்கும் என்பதை சோதனை செய்து அறிந்துகொள்வது அவசியம்.

களையும், முளைப்புத்திறனும்

மண்ணில் உள்ள அனைத்து உயிர்களும் எந்த சூழலிலும் தங்களை தகவமைத்து வாழும் இயல்பைக் கொண்டிருக்கிறது. விதைகளும் அந்த வகைதான். நாம் எப்போதோ சாப்பிட்டு துப்பிய பழ விதைகள் மழை பெய்யும் சமயங்களில் முளைத்து மரமாகிவிடும். வயல்களில், சோலையோரங்களில் உள்ள களைச்செடி வெயில் காலங்களில் கருகி அழிந்தாலும், அடுத்த மழைக்கு முளைத்துவிடும். 20 ஆண்டுகள் மழையே பெய்யாமல் போனாலும் அந்த விதை உயிரோடுதான் இருக்கும். 20வது வருடத்தில் மழை பெய்தால் களைச்செடியின் விதை முளைத்துவிடும். அதுபோல்தான் கோபுர கலசங்களில் உள்ள விதைகள் முளைப்பதற்காக காத்திருந்து, நிலத்தில் போடும்போது முளைக்கும் என்கிறார் மகேஸ்வரன்.

The post கோபுரக்கலசங்களில் விதை சேமிப்பு : வேளாண்துறை அதிகாரியின் சுவாரஸ்ய தகவல்கள் appeared first on Dinakaran.

Related Stories: